மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “ஆ”கார வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “ஆ”கார வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 மே, 2021

ஆஸ்துமா (Asthma)

 

01.  ஆடாதொடை இலைத் தூளை, ஊமத்தை இலையில் வைத்து சுருட்டி, ஆவி பிடித்தால் மூச்சுத் திணறல் தீரும். இலையை உலர வைத்து சுருட்டுப் போல சுருட்டி, பற்ற வைத்து புகை பிடித்தால் இரைப்பு நோய் (ஆஸ்துமா) தணியும்.

 

02.  ஆடாதொடை இலைகலைப்பறித்து வந்து சுத்தம் செய்து சட்டியில் போட்டு ஒரு தம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி அரை தம்ளராக சுண்டியதும் எடுத்து வடிகட்டி 50 மி.லி வீதம் தினசரி பருகி வந்தால் காசநோய் (ஆஸ்துமா) குணமாகும் .(1078)

 

03.  ஆடாதொடை மணப்பாகு 10 மி.லி அளவு வெந்நீரில் கலந்து  தினசரி 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

04.  ஆடாதொடை மணப்பாகு:- ஆடாதொடை இலைகள் 700 கிராம் எடுத்து, நறுக்கி, நெய்யில் வதக்கி, இலவங்கம் 10 கிராம், ஏலக்காய் 4 , சிற்றரத்தை 10 கிராம், அக்கரகாரம் 10 கிராம் ஆகியவற்றைத் தூள் செய்து போட்டு, பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து, தேன் பதமாகக் காய்ச்சி ஒரு சீசாவில் அடைத்து வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை தீரும். 3 வேளையாக தொடர்ந்து கொடுத்து வந்தால், நிமோனியா காய்ச்சல், மார்ச்சளி, காசம், நீர்த்த ஆஸ்துமா, எலும்புருக்கி நோய், கபம், இருமல் ஆகியவை போகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டரை மி.லி முதல் 5 மி.லி வரை கொடுக்கலாம்.

 

05.  ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சம அளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு தேக்கரண்டி வரைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமடையும்.

 

06.  இஞ்சி 10 கிராம், வெள்ளெருக்கம் பூ 3, மிளகு 6, இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் காலை மாலை குடித்து வர, ஆஸ்துமா இரைப்பு, நுரையீரல் சளி அடைப்பு ஆகியவை தீரும்.

 

07.  இஞ்சிச் சாறு, மாதுளம் பழச் சாறு, வகைக்கு 30 மி.லி. எடுத்து  அத்துடன் தேன் 15 மி.லி கலந்து 3 வேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தீரும்.

 

08.  இண்டங்கொடிச் சமூலம், தூதுவேளை, கண்டங்கத்தரி ஆகியவை வகைக்கு ஒரு பிடி எடுத்து, திப்பிலி 5 கிராம், பூண்டு 5 கிராம் ஆகியவற்றைச் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, வேளைக்கு 100 மி.லி வீதம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

09.  இன்புறா இலையின் பொடியை இரண்டு பங்கு அரிசி மாவுடன் கலந்து அடையாகச் செய்து சாப்பிட்டால், இருமல் இரைப்பு, இருமல், சளி முதலியன போகும்.

 

10.  இன்புறா, வல்லாரை வகைக்கு 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மி.லி யாக காய்ச்சி வேளைக்கு 30 மி.லி வீதம் குடித்து வந்தால், ஆஸ்துமா தீரும்.

 

11.  ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டு அவியலாய் அவித்து உலர்த்தி ஒன்றிரண்டாய் இடித்துப் பீடியாய்ச் செய்து புகை பிடிக்க ஆஸ்துமா மூச்சுத் திணறல் உடனே  குறையும்.

 

12.  எருக்கின் ஒரு வகையான வெள்ளெருக்கம் பூ , மிளகு, இலவங்கம் ஆகியவற்றை 2 : 1 : ½ என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து மிளகு அளவு உருண்டைகள் ஆக்கி, வேளைக்கு இரண்டு வீதம் சாப்பிட்டு வந்தால் மூச்சுத் திணறல், ஆஸ்துமா சரியாகும். (1085)

 

13.  எலுமிச்சம் பழச் சாறுடன் தேன் கலந்து தினசரி படுக்கப் போகும் முன்பு அருந்தி வந்தால் ஆஸ்துமா தொல்லை குறையும். (162)

 

14.  ஒதியம் பிசின் 10 கிராம், கிராம்பு 5 கிராம் ஆகியவற்றைப் பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

15.  மம் அரைத் தேக்கரண்டி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா வராது.

 

16.  ஓமம், திப்பிலி, ஆடாதொடை இலை, கசகசாத் தூள் தலா 20 கிராம் எடுத்து, ஒரு மண் சட்டியில் போட்டு, போதிய நீர் விட்டுக் கசாயமாகக் காய்ச்சி, தினமும் மூன்று வேளை பருகினால் ஆஸ்துமா குணமாகும்

 

17.  கண்டங்கத்தரி வேர், ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் எல்லாவற்றையும் எடுத்துச் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் தினசரி 4 வேளைகள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

18.  கண்டங்கத்தரி, ஆடாதொடை, இண்டு, இசங்கு, சுக்கு, திப்பிலி, துளசி, தூது வேளை, வால்மிளகு  ஆகியவை தலா 2 கிராம் எடுத்து பொடித்து 2 தம்ளர் நீரில் கொதிக்க வைத்து, காய்ச்சி, வடிகட்டி அருந்தினால் ஆஸ்துமா, வலிப்பு நோய்கள் குணமாகும்.

 

19.  கண்டங்கத்தரி, துளசி, தூதுவேளை இலைகளைச் சம அளவு எடுத்து நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி உட்கொண்டு வந்தால் ஆஸ்துமா, சளிக்கு நல்ல நிவாரணியாகும்.

 

20.  கரிசலாங்கண்ணி (மஞ்சள் அல்லது வெள்ளை) தழைகளைத் தண்டுடன் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதே அளவு கறிவேப்பிலைத் தழைகளையும் எடுத்து (சம அளவு தேவை) நிழலில் பத்து நாள் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பின்  உரலில் போட்டு இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இப்பொடியில் இரண்டு தேக்கரண்டி எடுத்து வாயில் போட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றிலும், மதியம் உணவுக்கு முன்பும், இரவு உணவுக்குப் பின்புமாக 48 நாள் சாப்பிட வேண்டும். காலையில் மருந்து சாப்பிட்டவுடன், நாள்தோறும் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில் போட்டு வெறுமனே வதக்கி, கேழ்வரகு மாவில் போட்டுப் பிசைந்து அடை சுட்டுச ஒரு மாதம் மட்டும் சாப்பிட வேண்டும்.நோயின் கடுமை ஓரளவு குறைந்த பின் அதே மருந்தை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும். ஆஸ்துமா காணாமற் போய்விடும். ஆனால் குளிர்ச்சியான பண்டங்களையும், புலால் உணவுகளையும், முட்டை, பலாப் பழம் ஆகியவற்றையும் சாப்பிடக் கூடாது. பலாப் பழம் ஆகவே ஆகாது.  (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

21.  கரிசலாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய் வகைக்கு 2 லிட்டர் எடுத்து, அதிமதுரத் தூள் 40 கிராம் சேர்த்துப் பதமுறக் காய்ச்சி, வடிக்கட்டி, காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம்  சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தீரும்.

 

22.  கரிசாலைச் சாறு + எள் நெய் (நல்லெண்ணெய்) வகைக்கு ஒரு லிட்டர் கலந்து, இதில் அதிமதுரம் 100 கிராம், திப்பிலி 50 கிராம் போட்டு சாறு சுண்டக் காய்ச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா, சளி, இருமல், குரல் கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

 

23.  கருங்காலி மரக் கட்டை ஒரு பங்கு, எட்டு பங்கு நீர், சிறிதளவு கடுக்காய், நெல்லிகாய், தான்றிக் காய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள். ஆஸ்துமா, இருமல் அகலும்

 

24.  கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மி.லி.யுடன் பூண்டுச்சாறு 30 மி.லி.சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட  ஆஸ்துமா  குணமாகும். புலால்,    புகை,  போகம்   தவிர்க்கவும்  ஆஸ்துமா மூச்சுத்திணறலில் உலர்த்திய தூதுவேளைப் பழத்தூளைப் புகைப் பிடிக்க, சளி இளகி குணப்படும். [சுவாசகாசம் என்பது ஆஸ்துமா, ]

 

25.  கறி முள்ளி இலைச் சாறு 15 மில்லி லிட்டர் காலை மாலை தேனுடன் தொடர்ந்து சாப்பிட ஆஸ்துமா தீரும்.

 

26.  காக்கிரட்டை இலையை (சங்குப் பூ இலை) வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும். (1067)

 

27.  கிராம்பு, சுக்கு, மிளகு, பச்சைக் கற்பூரம் இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதை வெள்ளைத் துணியில் சிறு பொட்டலமாக  வைத்துக் கொண்டு முகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு (ஆஸ்துமா) குறையும். (1072)

 

28.  குங்குமப்பூவுடன் சிறிது தேன் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டால் ஆஸ்துமா நீங்கி உடல் நலம் பெறும்

 

29.  கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. வீதம் தினந்தோறும் காலை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தீரும்.

 

30.  சிறுகுறிஞ்சான் வேர்ச் சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகை, வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால்  கபம் வெளியாகி ஆஸ்துமா, மூச்சுத் திணறல் தீரும்.

 

31.  சிற்றரத்தை மருதம் பட்டை, திப்பிலி, சுக்கு சேர்த்துக் கசாயம் வைத்து நாற்பத்தெட்டு  நாட்கள் குடித்து வந்தால் இரைப்பிருமல் (ஆஸ்துமா) குணமாகும். (1465)

 

32.  சுக்குப் பொடி சிறிதளவு எடுத்து ஐந்து துளசி இலைகளைச் சேர்த்து, கொதிக்க வைத்து, தேன் கலந்து குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகும்.

 

33.  சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊற வைத்து, காய வைத்து, எண்ணெயில் வறுத்து, இரவு உணவில் பயன்படுத்தி வந்தால், மார்புச்சளி, ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு நின்று விடும். (128)

 

34.  சுண்டைக் காயை உப்பு கலந்த மோரில் 2 முறை ஊறவைத்துக் காயவைத்து, எண்ணெயில் வறுத்துப் பொடித்து இரவில் உணவுடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டுவர ஆஸ்துமா தீரும்  (128)

 

35.  தவசி முருங்கை இலைச் சாற்றை 15 மில்லி லிட்டர் காலை மாலை சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

36.  தான்றிக் காயின் தோலுடன் தண்ணீர் சேர்த்து கசாயம் செய்து அதனுடன் தேன் கலந்து 60 மி.லி அருந்தி வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

 

37.  திப்பிலியை முசுமுசுக்கை இலைச் சாறில் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவுப் பொடியைத் தேனில் குழைத்து ஒரு வெற்றிலையில் வைத்து, வெற்றிலையுடன்  சாப்பிடுங்கள். ஆஸ்துமா குறையும்.

 

38.  தூதுவளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

 

39.  தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட்டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

 

40.  தூதுவேளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100 மி.லி ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குணமடையும்.

 

41.  தூதுவேளை, தாளிசபத்திரி சிறிதளவு, திப்பிலி, சுக்கு, மிளகு, ஆகியவற்றைக் கசாயமாக்கி, வடிகட்டி, தேன் கலந்து அருந்தலாம். மூச்சுத் திணறல், ஆஸ்துமா, குளிர்காய்ச்சல், ஆகியவை குறையும்.

 

42.  தூதுவேளைச் சமூலம் 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பருகி வர ஆஸ்துமா சளி, இருமல் தீரும்.

 

43.  தூதுவேளைச் சமூலம், கொன்றைப் பட்டை, சமனளவு எடுத்துச்  சூரணமாக்கி, அதில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

44.  தூதுவேளைச் சாறு 50 மில்லியளவ ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபம்  நீங்கும்.

 

45.  தூதுவேளைப் பழங்களை எடுத்து உலர்த்தி, தூளாக்கி வைத்துக் கொண்டு, தணலில் இட்டு, அதிலிருந்து வரும் புகையை  உள்ளுக்கு இழுத்தால், ஆஸ்துமாவின் கடுமை குறையும். சளி விலகும். (1084)

 

46.  தேன் சிறிதளவு எடுத்து அத்துடன் கடுகு சேர்த்து  அரைத்துக் குடித்தால் ஆஸ்துமா,கபம், இருமல் போகும்.

 

47.  தொட்டாற் சுருங்கி வேரை எடுத்து சுத்தம் செய்து நசுக்கி, பிழிந்து சாறு எடுத்து தேங்காய்ப் பால் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா  குணமாகும்.  (1065)

 

48.  நஞ்சறுப்பான் கொடியின்  இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கால் / அரை கிராம் அளவில் எடுத்து தேனில் குழைத்து தினமும் மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

 

49.  நஞ்சறுப்பான் இலையுடன் மிளகு சேர்த்து தின்று வந்தால் நாளடைவில் ஆஸ்துமா குணமாகும்.   (1064)

 

50.  நாயுருவிச் சாம்பல், ஆனங்காய் ( ஆண் பனை பூ பாளை ) சாம்பல், சம அளவு சேர்த்து நல்ல நீர் விட்டுக் கரைத்து ஒரு பொழுது ஓய்வாய் வைத்திருக்க, நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பிலேற்றிக் காய்ச்சினால் உப்பு கிடைக்கும். இதற்கு நாயுருவி உப்பு என்று பெயர். இந்த உப்பு 2 அரிசி எடை  தேனில் குழைத்துக் கொடுத்துவர ஆஸ்துமா தீரும்.

 

51.  நொச்சி இலை 2 , மிளகு 4, இலவங்கம் 1 ,சிறிய பூண்டுப் பல் 4 இவற்றை வாயில் போட்டு மென்று சுவைத்து, சாரத்தை மெதுவாக விழுங்கினால் ஆஸ்துமா மூச்சுத் திணறல் தீரும். நீடித்து உண்டு வர ஆஸ்துமா தீரும்.(1440)

 

52.  பிரமத்தண்டு ( குடியோட்டிப் பூண்டு எனப்படும் கழுதை முள்ளிச் செடி ) சமூலச் சாம்பல் 30 மில்லி கிராம் எடை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

53.  பிரமதண்டு சமூலச் சாம்பல் மூன்று அரிசி எடை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல், நுரையீரல் நோய்க\ள் தீரும்.  (1475)

 

54.  பொடுதலை இலையுடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவைச் சேர்த்துத் துவையலாகிச் சுடு சோற்றில் நெய்யுடன் உண்டு வந்தால், ஆஸ்துமா தீரும்.

 

55.  மருத மரப் பட்டைப் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சினைகள் சரியாகும்.

 

56.  மருதம் பட்டை 100 கிராம், சித்தரத்தை 5 கிராம், திப்பிலி 10 கிராம், சுக்கு 15 கிராம் ஒரு லிட்டர் நீரில் தட்டிப் போட்டு, அரை லிட்டராகக் காய்ச்சி, வடிக்கட்டி, வேளைக்கு 10 மி.லி. வீதம் தினசரி 4 வேளையாகச் சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

57.  முசுமுக்கை இலைச் சாற்றுடன் சமனளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வர ஆஸ்துமா தீரும். (1660)

 

58.  முசுமுசுக்கை இலையை நெய் விட்டு வதக்கி பகல் உணவுடன் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தீரும்.  (1068) 

 

59.  முசுமுக்கை இலைச் சூரணம் 120 கிராம், தூதுவேளைச் சூரணம் 80 கிராம் கலந்து அதில் 50 மில்லி கிராம் எடை மட்டும் எடுத்து, அத்துடன் கருவேலம் பிசின் சூரணம் 20 மில்லி கிராம் கலந்து, அதை வெண்ணெயில் குழைத்து ஒன்று அல்லது இரண்டு மண்டலம் (மண்டலம் = 48 நாள்) சாப்பிட ஆஸ்துமா தீரும்.

 

60.  முசுமுசுக்கை இலைச் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணை கலந்து காய்ச்சி வாரம் ஒருமுறை தலை முழுக இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி தீர்வதுடன் கண் எரிச்சல், உடம்பு எரிச்சல் தீரும்.

 

61.  முருங்கைப் பட்டைச் சாறு, வெங்காயச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை தனித்தோ , சேர்த்தோ தினமும் உட்கொண்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.  (1073)

 

62.  மூக்கிரட்டை வேர் 30 கிராம், அறுகம்புல் 30 கிராம், மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, வடிக்கட்டி தினசரி 3  வேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா தீரும்.

 

63.  மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்துவர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணறல் தீரும்.

 

64.  வில்வ இலை சூரணம் நூறு கிராம் எடுத்து 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்

 

65.  வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வந்தால் ஆஸ்துமா குணமாகும்.  (1066)

 

66.  வில்வ இலைப் பொடியை தினசரி ஒரு  தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.  (138) (1070)

 

67.  வில்வ இலைகளைப் பறித்து வந்து நிழலில் உலர்த்திப்பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்  தேக்கரண்டி வில்வ இலைப் பொடியுடன்  திப்பிலிப் பொடி அரைத் தேக்கரண்டி சேர்த்து தேனில் குழைத்து இருவேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா எனப்படும் மூச்சிரைப்பு நோய் குணமாகும்.

 

68.  வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்குமப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை, மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48-96 நாளில் ஆஸ்த்துமா, இழுப்பு, இரைப்பு, இருமல், காசம், ஜன்னி குணமடையும்.


 

 ==========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021}

===========================================================