மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தலை - வலி (Head-ache)

 

01. அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியிலும் உச்சந் தலையிலும்  தடவினால் தலைவலி தீரும். (399)

 

02. அவரி இலையுடன் தேங்காய் எண்னெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி, தலைக்குத் தேய்க்க, தலைவலி குணமாகும்.(417)

 

03. இலவங்கம், ஆலமர விதை, வெற்றிலைக் காம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிது பால் ஊற்றி அரைத்து பசையாக்கி சற்று சூடாக்கி நெற்றிப் பொட்டிலும் உச்சந்தலையிலும் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.(402)

 

04. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக் காம்பு ஆகியவற்றைப் பால் விட்டு அரைத்து, சூடாக்கி, நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்

 

05. ஏலக்காய் சிறிதளவு, மிளகு 4, சுக்கு இவற்றுடன் பால் ஊற்றி அரைத்து நெற்றியில் பற்றிட்டால் தலைவலி குணமாகும்.

 

06. ஓமவல்லி இலைச் சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துச் சூடாக்கி தலைக்குப் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும்.

 

07. ஓமவல்லி இலைச்சாற்றுடன் நல்லெண்ணை கலந்து நெற்றியிலும் உச்சந் தலையிலும்   பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும் (397)

 

08. கடுகு ஒரு தேக்கரண்டி, சுக்கு சிறு துண்டு, சாம்பிராணி 5 கிராம், இவற்றைப் பொடித்து, சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டுக் குழைத்துப் பூசினால் தலைவலி தீரும்.

 

09. கடுக்காய் சதைப் பகுதி, கோரைக் இழங்கு, நிலவேம்பு வேப்பம் பட்டையை சம அளவு எடுத்து, மண் சட்டியில் போட்டு, 300 மி.லி. நீர் ஊற்றி, பாதி அளவாக நன்றாக வற்றும் வரைக் காய்ச்சி, தினமும் மூன்று வேளைகள் சிறிது தேன்கலந்து குடித்தால், தலைவலி குறையும்.

 

10. கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு, வேப்பம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து  இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி, பாதியாகச் சுண்டும் வரைக் காய்ச்சி சிறிதளவு தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் தலைவலி கட்டுப்படும்.

 

11. கண்டங் கத்தரி  இலைச் சாற்றில் எண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர, தலைவலி, கீல்வாதம், அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும்

 

12. கண்டங் கத்தரி இலைச் சாறுடன் சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து தலையிலும் உச்சியிலும் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

 

13. கண்டங்கத்தரி இலைச் சாற்றை சம அளவு நல்லெண்ணையுடன் கலந்து பக்குவமாகக் காய்ச்சிப் பூசினால் தலைவலி, வாத நோய்கள் கட்டுப்படும்.

 

14. கண்டங்கத்தரி வேர், சிற்றரத்தை, சுக்கு, சோம்பு ஆகியவை தலா 20 கிராம் எடுத்து பால் விட்டு அரைத்து 250 மி.லி நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், தலைவலி, தலை பாரம், தும்மல் ஆகியவை குணமாகும்.

 

15. கிராம்பு, சுக்குடன், துளசிச் சாறு சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்றுப் போட்டால், தலைவலி தீரும்.

 

16. குங்குமப் பூவைத் தாய்ப் பால் விட்டு அரைத்து நெற்றியிலும் உச்சந் தலையிலும் பற்றுப் போட்டால்  தலைவலி தீரும் (408)

 

17. குப்பை மேனிச் சாறு எடுத்து நெற்றியிலும் உச்சந் தலையிலும்  தடவினால் தலைவலி குறையும் (398) (1125) (1297)

 

18. குப்பைமேனி இலைச் சூரணத்தைப் பொடிபோல நசியமிட (மூக்கில் இட) தலைவலி நீங்கும்

 

19. கொத்துமல்லி விதையை அரைத்து, சந்தனம் கலந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி விலகும்.

 

20. கொத்துமல்லிச் சாறுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து நெற்றியிலும் தலை உச்சியிலும் பூசினால் தலைவலி நிற்கும்.

 

21. கொய்யா இலைகளைச் சந்தனத்துடன் அரைத்துப் பற்றுப் போடுங்கள். கடுமையான தலைவலி நீங்கும்

 

22. சீந்தில் கொடி (தண்டு), சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ஒரு கோலிக் குண்டு அளவு சாப்பிட்டால் தலைவலி சரியாகும்.

 

23. சுக்கு, பெருங்காயத்துடன், பால் சேர்த்து அரைத்து இடுப்பு வலி, தலைவலி, மூட்டு வலிகளுக்குப் பற்றுப் போடலாம்.

 

24. சுக்கை அரைத்து நெற்றியிலும்  உச்சந்தலையிலும்  பற்றுப் போட்டால்  தலைவலி நீங்கும்.(395)

 

25. தாழம்பூ எண்ணெயை தலைவலி, உடல்வலி முதலியவைகளுக்கு மேலுக்குத் தடவலாம். இதைக் காது வலிக்கும் இரண்டொரு துளி விடலாம்.

 

26. திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச் சாறு இரண்டையும் கலந்து பச்சைக் கற்பூரம் சேர்த்து சுவாசிக்க தலைவலி தீரும்.(401)

 

27. தும்பைப் பூவின் சாற்றை தீராத் தலைவலிக்கு இரண்டு துளி மூக்கிலிடலாம்.தலைவலி நீங்கும்.

 

28. துளசி இலைகள் கைப்பிடி அளவு, மிளகு மூன்று , இஞ்சி ஒரு துண்டு எடுத்து மைய அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டாலும் தலைவலி தீரும்.

 

29. துளசி இலையை நீர் விட்டு நன்கு அரைத்து தலையில் பற்று இடுவதால், தலை பாரமும், தலை வலியும் குறையும்.

 

30. தேனை [ சுத்தமானது ] அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தினால் தலைவலி நீங்கும்.(411)

 

31. நமது கையின் கட்டை விரலின் மேற்பகுதியில் 10 – 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தால் தலைவலி நீங்கும். (இது ரெய்கி மருத்துவம்)

 

32. நிலக்கடலைப் பருப்பை [பச்சைப் பருப்பு] எடுத்து தண்ணீர் விட்டு மை போlல் அரைத்து நெற்றி முழுவதும் அல்லாமல் கன்னம் வரையிலுமாக  பற்றுப் போட்டால் தலைவலி தீரும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

33. நொச்சி இலையைச் சுக்குடன் சேர்த்து அரைத்து நெற்றிப்பொட்டில் பற்றுப் போட்டால் தலைவலி தீரும்.

 

34. நொச்சி இலையைக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு செங்கற்களை அதில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, தலை பாரம் நீங்கும்.  (404)

 

35. நொச்சித் தைலம் வெந்நீரில் போட்டு வாரம் இருமுறை தலை குளிக்க  கழுத்து வலி, மண்டை வலி, பொட்டு வலி ஆகியவை தீரும்.(415)

 

36. பிரண்டை எண்ணெய் தேய்த்து வந்தால் தலைவலி குணமாகும். வெட்டுக் காயம் சீக்கிரம் ஆறும்.(416)

 

37. மரிக்கொழுந்துச் செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டினால் தலைவலி குணமாகும்.(406)

 

38. மருத மரப் பட்டையைப் பொடித்து மிகுந்த தலைவலி உள்ளவர்களுக்கு மூக்கிலிட, தலைவலி குறையும்.

 

39. மருதாணி இலையுடன் தாய்ப் பால் விட்டு அரைத்து நெற்றியிலும் உச்சந் தலையிலும்  பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.(407)

 

40. மிளகுப் பொடி அரை கிராம் எடுத்து  ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

 

41. மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். மிளகைப் பொடியாக்கி ஒரு அரிசி எடை அளவுக்கு எடுத்து மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும். (மூக்கில் எரிச்சல் ஏற்படலாம்!)

 

42. மிளகாய் வற்றல் அல்லது மிளகு நல்லெண்ணெயில் சிறிது போட்டு காய்ச்சி, ஆறிய பின் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் எவ்வித தலைவலியும் தீரும்.  (1529)

 

43. முருங்கை இலைச் சாற்றுடன் மிளகுப்பொடியும் சேர்த்துக் குழைத்து தலையில் பற்று இட்டால் தலைவலி தீரும்

 

44. வெற்றிலையை ( முற்றியதாக இருக்க வேண்டும் ) வட்டமாக வெட்டி   உமிழ்நீர் தடவி நெற்றிப் பொட்டுகளில் ஒட்டி வைத்து விட்டால் இலேசான தலைவலிகள் குணமாகி விடும். (418)

 

45. வெற்றிலைக் காம்பு, இலவங்கம், ஆல அரிசி (ஆலம் பழ விதை) சம அளவு எடுத்து பால் ஊற்றி அரைத்து சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் நெற்றிப் பொட்டிலும், உச்சந் தலையிலும் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.  (402)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================