மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

பல் - வலி (Tooth Ache)

 

1)    அக்கராகார வேர்த் தூளை 30 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு லிட்டர் குடிநீரில் இட்டு, கால் லிட்டர் அளவு ஆகும் வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். காய்ச்சிய அந்த வேர்க் கஷாயத்தை வடிகட்டி, ஆறவைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வர வேண்டும். இதனால் பல் வலி நீங்குவதோடு பல் ஆட்டமும் குறையும்.

 

2)    இலவங்கத் தைலத்தில் இருந்து இரண்டு சொட்டு வலிக்கும் இடத்தில் விட்டால், பல் வலி தீரும்.(226)

 

3)    கண்டங்கத்தரிப் பழத்தை உலர்த்தி நெருப்பில் இட்டு வாயில்  புகையைப் பிடித்தால், பல் வலி, ஈறு வலி, பல் அரணை தீரும்.(229)

 

4)    கொய்யா மரத்தின் இளந் தளிர்கள் இரண்டு கைப்பிடி அளவு பறித்து வந்து உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்து, ஒன்றுக்கு இரண்டு பங்காகத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்காகச் சுண்டவைத்து, சற்று ஆறவைத்து பொறுக்கும் சூட்டில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஐந்தாறு நாட்கள் இவ்வாறு செய்தால் பல் வலி சரியாகிவிடும். (ஆதாரம் :“ நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல்)


5)    கொய்யா மரத் தளிர் கிடைக்கவில்லை என்றால் மாந்தளிரையும் மேற்கண்டபடிப் பயன்படுத்தலாம்பல்வலி தீரும்.

 

6)    கொள்ளுக் காய் வேளை வேரை நீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்தால், பல் வலி தீரும். வாய்ப்புண் குணமாகும்..(257)

 

7)    கோவைப் பழம் சாப்பிட்டு பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.(242) (1139)

 

8)    சுக்கை ஒரு துண்டு எடுத்து மென்று சாப்பிடுங்கள். பல் வலி, தொண்டைக் கட்டு நீங்கும்.

 

9)    சுக்கை ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் பல் வலி குறையும்.(233)

 

10)   சுக்கைத் தோல் நீக்கிக் ஒரு துண்டு எடுத்து கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பால், சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வரப் பல் வலி தீரும்.

 

11)   தான்றிகாய்த் தோலைத் தண்ணீரில் போட்டு ஊறவிட்ட பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி தணியும். அல்லது தான்றிக் காயைச் சுட்டுப்பொடி செய்து, பல் துலக்கினாலும் பல் வலி, ஈறு நோய் குறையும்

 

12)   தான்றிக் காய்த் தூளைச் சிறிதளவு எடுத்து பல் துலக்கி வந்தால், பல் வலி குறையும்.

 

13)   துத்தி இலை, துத்தி வேர் ஆகியவற்றை நீரில் இட்டுக் கழாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால், பல் வலி தீரும்.(235)

 

14)   நந்தியாவட்டை வேரை மெதுவாக மென்று துப்பினாலோ அல்லது வாயில் அதக்கிக் கொண்டாலோ , பல் வலி தீரும்.

 

15)   நந்தியாவட்டை வேர் மிகுந்த கசப்பு உடையது. வேரினை வாயிலிட்டு மென்று தாடையில் அடக்கிக் கொண்டால் பல் வலி தீரும்.

 

16)   நந்தியாவட்டைத் தண்டுப் பட்டையைக் காய வைத்துத் தூள் செய்து 500 மி.கி முதல் ஒரு கிராம் வரை தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டால் பல் வலி குறையும்

 

17)   பப்பாளி வேரினை நன்கு கசக்கி, பல் மற்றும் ஈறுகளில் தடவினால் பல் வலி குறையும்.

 

18)   பிராயன் பாலைத் தடவி வந்தால் பல் ஆட்டம், பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை தீரும். (267) (1999)


19)      மகிழம் பழத்தின் மேல் பட்டையை பொடியாக்கி பற்பொடி போல் பல் துலக்கி வந்தால் கடுமையான பல்வலி கூட மறையும்.  (245)

 

20)   மாசிக்காய்ப் பொடி ஒரு தேக்கரண்டி, மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து நீரில் கொதிக்க வைத்து வாயை நன்றாகக் கொப்பளித்தால் பல் சொத்தை, தொல்லை நீங்கும். பல் வலி, ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் சரியாகும்.

 

21)   விரலி மஞ்சளை நல்ல விளக்கில் திரி போட்டுத் தீபம் ஏற்றி அதில் சுட வேண்டும். சுட்ட மஞ்சளைப் பொடி செய்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்து அதைக் கொண்டு தொடர்ந்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.  அதிகமாக வலி இருந்தால், இரண்டொரு இலவங்கத்தை எடுத்துக் கல்லில் இடித்துப் பொடி செய்து வலியுள்ள பல்லின் மேல் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரு முறை இவ்வாறு செய்தால் பல் வலி   குணமாகும்.   (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

==========================================================