மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

பல் - நலம் தரும் பற்பொடி (Healthy Tooth Powder)

 

01.   அக்கரகார வேரினைத்  தனியாக  இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பல் துலக்கி  வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும்.

 

02.   அரப்புப் பொடி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றைச் சமமாக எடுத்து பிரயான் மரப் பட்டைத் தைலத்தில் இவற்றைச் சேர்த்து, மெழுகு போல் அரைத்து பற்பொடி போல பல் துலக்கி வந்தால் அனைத்து விதமான பல் நோய்களும் குணமாகும்.(232)

 

03.   இலவங்கப் பட்டைப் பொடியை பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் வலி, வாயில் ஏற்படும் நாற்றம், பல் சொத்தை ஆகியவை நீங்கும். (Harish)

 

04.   எருக்கம் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும்.இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.

 

05.   ஆலம் விழுது சூரணம், மாவிலை சூரணம், இவைகளுடன் சிறிது உப்பும் சேர்த்து பற்பொடியாக்கிப் பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம் நிற்கும். பற்கள் உறுதி பெறும். (265)

 

06.   கடுக்காய்த் தூள், உப்புத் தூள் சம அளவில் கலந்து பற்பொடியாகப் பாவித்து பல் துலக்கி வந்தால், பல் வலி, ஈறு வலி, இரத்தம் கசிதல் குணமாகும்

 

07.   கருவேலம் பட்டை, வாதுமைக் கொட்டைத் தோல் சமனளவு எடுத்துப் பொடித்துப் பற்பொடியாக்கி, பல் தேய்த்து வர, பல் ஈறுகளில் உள்ள புண்கள், பல் வலி, பல் வீக்கம், பல் ஆட்டம் ஆகியவை தீரும்.

 

08.   கருவேலம் பட்டைப் பற்பொடியில் பல் துலக்கி, மகிழ இலைக் கியாழத்தால்  வாய் கொப்பளித்து வந்தால் பல் நோய் அனைத்தும் தீரும்..

 

09.   கருவேலம் பட்டையைப் பொடி செய்து பற்பொடியாக்கிப் பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் நெருங்காது.(248)

 

10.   கழற்சிகாய்ப் பருப்பை சிறிதளவு எடுத்து  சுட்டு, பொடித்து, அதனுடன் சம அளவு வறுத்த பாக்குத் தூள், வெங்காரம் ஆகியவற்றைச் சேர்த்து பற்பொடிபோல் பாவித்து  பல் துலக்கி வருபவர்களுக்கு, ஈறுநோய்,பல் சொத்தை அகன்றுவிடும். ஈறுகள் பலமடையும்.

 

11.   கிரந்திநாயகம் இலைகளுடன் சமனளவு நாட்டுக் கல்நார் சேர்த்து அரைத்து அடையாக்கி, உலர்த்திப் புடமிட்டு எடுத்து அரைத்து, பற் பொடியாக்கி அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பல் வலி, பல் ஆட்டம், பல் அரணை, பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுப்புண், இரத்தக் கசிவு ஆகியவை தீரும்.

 

12.   சிலந்திநாயகம் இலையுடன் சமனெடை நாட்டுக் கல்நார் சேர்த்து அரைத்து அடை தட்டிக் காய வைத்து வரட்டியினிடையே வைத்துப் புடமிட்டு எடுத்துப்  பொடித்துப் பற்பொடியாக்கி பல் தேய்த்து வர, பல் வலி பல் ஆட்டம், பல் அரணை, பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறு புண், இரத்தக் கசிவு ஆகியவை தீரும்.

 

13.   சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு சமனளவு சூரணம் செய்து, பற்பொடியாகப் பயன்படுத்தி வந்தால், பல் சொத்தை, பல் ஆட்டம், இரத்தக் கசிவு தீரும்(228)

 

14.   சுக்குப் பொடியுடன் சிறிது உப்பு பொடித்து, கலந்து பற்பொடியாக்கி பல்துலக்கி வாருங்கள். பல் வலி தீரும்.

 

15.   சுக்குப் பொடியுடன் சிறிது உப்பு, கலந்து பற்பொடியாக்கி அதைக் கொண்டு பல்துலக்கி வாருங்கள். பல் வலி தீரும்.

 

16.   தான்றிகாய்த் தோலைத் தண்ணீரில் போட்டு ஊறவிட்ட பின் ந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி தணியும். அல்லது தான்றிக் காயைச் சுட்டுப்பொடி செய்து, பற்பொடி போல் பல் துலக்கினாலும் பல் வலி, ஈறு நோய் குறையும்.

 

17.   தான்றிக் காய்த் தூளைச் சிறிதளவு எடுத்து பற்பொடி போல் பல் துலக்கி வந்தால், பல் வலி குறையும்

 

18.   தான்றிக்காய், கிராம்பு, தாளிசபத்திரி தலா 100 கிராம் எடுத்து பொடித்து, பற்பொடி போல் பல் துலக்கி வந்தால், பல் வலி, பல் கூச்சம் தணியும்.

 

19.   தான்றிக் காய், கடுக்காய், நெல்லிக் காய் ஆகியவற்றைப் பொடி செய்து பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் இறுகும்; ஈறுகள் பலப்படும். (Harish)

 

20.   துளசி இலையையும், புதினா இலையையும் நன்கு நிழலில் உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொண்டு, அதனுடன் கிராம்புத் தூள் சேர்த்து ,இந்தப் பற்பொடியினால் பல் துலக்கினால் ஈறு வீக்கம், பல் வலி தீரும்

 

21.   நாயுருவி வேரைச் சுத்தம் செய்து வெயிலில் உலர வைத்து தூள் செய்து, இந்தத் தூளைப் பற்பொடியாகக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்கள் உறுதி பெறும்.

 

22.   நிழலில் உலர்த்திய கண்டங்கத்தரி வேரையும், புதினா இலைகளையும் நன்றாகப் பொடித்துப் பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் வலி வராது.

 

23.   நுணாவின் முதிர்ந்த  காயையும் உப்பையும் சமனளவு சேர்த்து அரைத்து, அடை தட்டி உலர வைத்து, புடமிட்டு அரைத்துப் பற்பொடியாகப் பயன்படுத்தி வந்தால், பற்கள் பலமடையும்.

 

24.   நுணாவின் முதிர்ந்த காய்களைச் சேகரித்து, உப்பு நீரில் ஊறவைத்து, பின்னர் வெயிலில் காயவைத்து சுட்டுக் கரியாக்கி சலித்து வைத்துக்கொண்டு பற்பொடி போல் பல் துலக்கி வந்தால் பல் சொத்தை குணமாகும்.

 

25.   புதினா இலையைக் காய வைத்து சம அளவு உப்பு சேர்த்து, மீண்டும் அரைத்து தூளாக்கி, பற்பொடியாகப் பாவித்து காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்கும்.  (241)

 

26.   புளியங்கொட்டைத் தோல், கருவேலம் பட்டைத் தூள் சமனளவு கலந்து, சிறிது உப்புப் பொடியும் சேர்த்து, இந்தப் பற்பொடியினால்  பல் தேய்த்து வரப் பல் கூச்சம், பல் ஆட்டம், சீழ், இரத்தம் வருதல், ஈறு வீக்கம் தீரும்.

 

27.   பூந்திக் கொட்டையுடன் சிறிது உப்பு சேர்த்து வறுத்து, வழக்கமாகப் பயன்படுத்தும் பற்பொடியுடன் கலந்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் வராது.  (240)

 

28.   மகிழம் பழத்தின் பட்டையைப் பொடியாக்கிப் பற்பொடியாகப் பன்படுத்திப்  பல் துலக்கினால் கடுமையான பல்வலி கூட மறையும்.(245)

 

29.   மருத மரப்பட்டையைப் பொடி செய்து சிறிது உப்பு சேர்த்து, பற்பொடியாக்கி  அதனால் பல் துலக்கி வந்தால் பல் வலி மறையும்; பற்கள் இறுகும்.

 

30.   மாதுளம் பழத் தோல் பொடியுடன் வேலம் பட்டைப் பொடியும் சேர்த்துப் பற்பொடி ஆக்கி பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.

 

31.   மாவிலையைப் பொடி செய்து பற்பொடியாக்கி பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.(234) (1140)

 

32.   மிளகு, உப்பு, பெருங்காயம் மூன்றையும் பொடி செய்து பற்பொடியாக்கி  வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது பல் தேய்த்து வந்தால் பல்வலி, மற்றும் இதர பல் தொந்தரவுகள் நீங்கும்

 

33.   மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பற்பொடி போல் பாவித்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

 

34.   வாகைமரப் பட்டையைக் கரியாக்கிப் பொடித்துப் பற்பொடியாக்கி பல் தேய்த்து வர, பல் ஆட்டம், ஈறு தேய்தல், பல் வலி ஆகியவை தீரும். (230) (246)

 

35.   வேப்பிலை நான்கு கைப்பிடி, உப்பு ஒரு கைப்பிடி எடுத்து சட்டியில் போட்டு வறுத்து, கருக்கி அதைப் பற்பொடி போல் பாவித்து  பல் துலக்கி வந்தால் வாய் நாற்றம் நீங்கும். பல், ஈறு உபாதைகள் குணமாகும்.   (237)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

 

==========================================================