மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

மாதவிடாய் பிரச்சினைகள் (Menses Problems)

 

01.  ஆமணக்கு எண்ணெய், மலை வேம்பு எண்ணெய் இரண்டையும் கலந்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாள் உட்கொண்டால் மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.  (599) (1953)

 

02.  ஏலக்காய்த் தூளினை சிறிதளவு எடுத்து செவ்வாழைப் பழத்துடன் சேர்த்துச் சாப்பிடும் பெண்களுக்கு மாத விடாய்க் கோளாறுகள் மறையும்.

 

03.  கல்யாண முருங்கையின் இலைச் சாறு 50 மில்லி 10 நாள் சாப்பிட மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்களுக்கு வலி தீரும்.

 

04.  கழற்சிக்காய்ப் பொடி கால் தேக்கரண்டி, சிறிதளவு மிளகுப் பொடி இரண்டையும் மோரில் கலந்து  வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வரவும். பெண்களுக்கு மாத விலக்குப் பிரச்சினை கட்டுப்படும்; அதிக இரத்தப் போக்கு, வெள்ளைப் போக்கு, நீர்க்கட்டி அகலும்.

 

05.  கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள  பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

 

06.  கொள்ளு வேக வைத்த நீரை அருந்தினால், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். உள் அழுக்கை வெளியேற்றும்.

 

07.  கொள்ளு வேக வைத்த நீரை இரு வேளைகள் குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறு வலிகள் தீரும்.(637)

 

08.  சதகுப்பை, எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சமஅளவு எடுத்து இலேசாக வறுத்து, பொடித்து மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 10 நாட்கள் முன்னரே, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனை வெல்லத்துடன்  கலந்து உருண்டை செய்து தினமும் இரு வேளை பெண்கள்சாப்பிட்டு வரலாம். மாதவிடாய் சுழற்சி சீராகும். வலியும் சோர்வும் குறைந்து கருப்பை பலப்படும்.

 

09.  செம்பருத்தி மலரை பெண்கள் உண்டுவந்தால் வெள்ளை ,வெட்டை , இரத்தக் குறைவு, பலவீனம் , மூட்டு வலி , இடுப்புவலி , மாதவிடாய்க்  கோளாறுகள்  நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.

 

10.  செம்பருத்திப் பூக்களைப் பொடி செய்து வைத்துக் கொண்டு, மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் தலைவலி, இடுப்பு வலி, மயக்கம், வெள்ளை படுதல் ஆகியவற்றிற்கு ஒரு தேக்கரண்டி அளவு பாலுடன் அருந்த நல்ல பலன் தரும். (செம்பருத்தி காண்க)

 

11.  தாழைத் தண்டின் உட்பகுதியான சோறு சூதகம் முறை தப்பாது உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது. 

 

12.  திப்பிலிப் பொடி கால் தேக்கரண்டியுடன் இரண்டு தேக்கரண்டி அளவு கற்றாழைச் சோற்றின்  சாறும் சேர்த்து  தண்ணீர் கலந்து குடித்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

 

13.  தும்பை இலை. உத்தாமணி இலை சமனளவு எடுத்துஅரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாமதித்த மாதவிடாய் நீங்கும்.( புளி பத்தியம் ) (1403)

 

14.  புதினா இலைகளை எடுத்து சாறு பிழிந்து, அத்துடன் தேன் கலந்து அருந்தி வந்தால் மாதவிடாய் ஒழுங்காகும்.  (597)

 

15.  மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாதவிடாய் காலத்தில் 3 நாள் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.  (599) (1953)

 

16.  மாசிக்காயைப் பொடி செய்து தினமும் மூன்று வேளை சிறிதளவு உட்கொண்டு வரும் மங்கையருக்கு மாதவிடாய் இரத்தப் போக்கு சீராகும்.

 

17.  மாவிலங்கப் பட்டைக் கசாயம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் தீரும்.  (1567) அரையாப்புக் கட்டி கரையும். (1582)

 

18.  வெந்தய விதையில் டைசோசீன் மற்றும் ஐசோஃப்ளவன்ஸ் இருப்பதால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சீர் செய்யும்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,கடகம் (ஆடி )16]

{01-08-2021}

==========================================================