மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மூச்சு - திணறல் (Asphyxia)

 

01.   ஆடாதொடை இலைச் சாறும், தேனும் சம அளவு கலந்து, சிறிது சர்க்கரை சேர்த்து, தினசரி 4 வேளைகள் கொடுத்து வந்தால் இருமல், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, இரத்த வாந்தி ஆகியவை நீங்கும். குழந்தைகளுக்கு ஒரு வேளைக்கு 5 துளிகள், சிறுவர்களுக்கு 10 துளிகள், பெரியவர்களுக்கு 15 துளிகள் கொடுக்கலாம்

 

02.   ஆடாதொடை உலர்ந்த இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டி புகைப் பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.

 

03.   ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பீடி போல் செய்து புகைத்தால்  ஆஸ்துமா, மூச்சுத் திணல் உடனே குறையும்.

 

04.   எருக்கின் ஒரு வகையான வெள்ளெருக்கம் பூ , மிளகு, இலவங்கம் ஆகியவற்றை 2 : 1 : ½ என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து மிளகு அளவு உருண்டைகள் ஆக்கி, வேளைக்கு இரண்டு வீதம் சாப்பிட்டு வந்தால் மூச்சுத் திணறல், ஆஸ்துமா சரியாகும்.(1085)

 

05.   சிறு குறிஞ்சான் வேர்ச் சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகை, வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால்  கபம் வெளியாகி ஆஸ்துமா, மூச்சுத் திணறல் தீரும்.

 

06.   சிறுகுறிஞ்சா சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுக சூரணம் ஒரு சிட்டிகை வெந்நீரில் உட்கொள்ள மூச்சுத் திணறல் சரியாகும்.(126)

 

07.   தாளிசபத்திரி சிறிதளவு, திப்பிலி, தூதுவேளை, சுக்கு, மிளகு, ஆகியவற்றைக் கசாயமாக்கி, வடிகட்டி, தேன் கலந்து அருந்தலாம். மூச்சுத் திணறல், ஆஸ்துமா, குளிர்காய்ச்சல், ஆகியவை குறையும்.

 

08.   தூதுவேளை இலைகளை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூச்சுத் திணறல் ஆகியவை சரியாகும். செரிமானத் தன்மை மிகும்.

 

09.   தூதுவேளைப் பழங்களை எடுத்து உலர்த்தி, தூளாக்கி வைத்துக் கொண்டு, ஆடாதோடையின் காய்ந்த இலையில் வைத்து, சுருட்டுப் போல் செய்து புகை பிடித்தால் ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல் சரியாகும். கபத் தொந்தரவு நீங்கும்.  (1069)

 

10.   மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்துவர கீல் வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணறல் தீரும்.

 

11.   வெந்தயக் கீரையில் ஒரு பிடி எடுத்து  சிறிதளவு புளி, காய்ந்த அத்திப் பழம் 2 (நறுக்கியது), உலர் திராட்சை 10, ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, சிறிதளவு தேன் கலந்து பருகினால், மார்பு வலி, மூச்சடைப்பு சரியாகும்.

 

12.   வெற்றிலைச் சாறுடன் கோரோசனை இழைத்து அரைச்சங்கு குழந்தைகளுக்கு புகட்டினால் மூச்சுத் திணறல் சரியாகும்.(151) (1175)

 

 

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================