மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

பெரும்பாடு (Menorrhagia)

 

01.  அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டையை எடுத்துக் காய்ச்சிய குடிநீர் காலை மாலை குடித்துவர, தீராத பெரும்பாடு தீரும்.

 

02.  அத்திப் பட்டையை பசுவின் மோர் விட்டு இடித்துப் பிழிந்து, ரசத்தை காலை மாலை 100 மி.லி வீதம் கொடுத்து வந்தால் பெரும்பாடு நிற்கும்

 

03.  அத்திப் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், பெரும்பாடு தீரும். மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.(719)

 

04.  அத்திப் பால் 15 மி.லி யுடன் வெண்ணெய் சர்க்கரை கலந்து, காலை மாலை கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறு நீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

 

05.  உத்தாமணி இலை, வல்லாரை இலை இரண்டையும் எடுத்து நிழலில் உலர்த்தி, பொடித்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் சாப்பிட பெரும்பாடு வலி தீரும்.(585)

 

06.  ஏலப் பொடியை வாழைப் பழத்தில் தூவி சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு கட்டுப்படும்(596)

 

07.    கவிழ்தும்பை இலையுடன் கருங் குருவை அரிசி சம அளவு எடுத்து இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து மூன்று வேளைகள் சாப்பிட்டால் பெரும்பாடு தீரும்.(624)

 

08.  கானவாழை சமூலம், அசோகுப் பட்டை, அருகம்புல் சமனாக எடுத்து அரைத்துக் காலை மாலை நெல்லிக்காயளவு கொடுத்துவரப் பெரும்பாடு தீரும்.

 

09.  கீழாநெல்லி வேரைக் கழு நீரில் அரைத்துக் கலக்கிக் கொடுத்து வந்தால் பெரும் பாடு விரைவில் சுகமாகும்.

 

10.  கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள  பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

 

11.  சித்தகத்தி விதைகளை ஊற வைத்து அரைத்து 5 கிராம் எடுத்து உள்ளுக்குச் சாப்பிட்டால் பெரும்பாடு, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.(616) (1804)

 

12.  சிறுகண்பீளை இலைச் சாற்றில் 50 மி.லி வீதம் குடித்துவர பெரும்பாடு, கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் போகும்.

 

13.  சிறுகண்பீளை வேர்ப் பட்டை, பனை வெல்லம் வகைக்கு 50 கிராம் எடுத்துக் கூட்டி மை போல் அரைத்து 50 மி.லி பசுவின் பாலில் கலந்து, காலை மாலைகளில் உட்கொண்டு வர கல்லடைப்பு, நீரடைப்பு, பெரும்பாடு முதலியன நீங்கும்.

 

14.  செங்கீரைத் தண்டினை அடைக்கடி உணவுடன் சேர்த்து வந்தால் பெரும்பாடு நோய் கட்டுப் படும். (806)

 

15.  செம்பருத்தி வேர்ப் பட்டை, இலந்தை மரப் பட்டை, மாதுளம் பட்டை சமனளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை, மாலை சாப்பிடப் பெரும்பாடு தீரும்.

 

16.  திப்பிலி மற்றும் தேற்றான் விதையை நன்கு பொடித்து வெள்ளை மற்றும் பெரும்பாட்டிற்கு அந்தப் பொடியை கழுநீரில் 3 – 4 கிராம் அளவு மூன்று நாட்கள் தர குணமாகும்.

 

17.  தென்னம் பூக்களை உரலில் இட்டு இடித்து சாறு எடுக்க வேண்டும். நாயுருவிச் செடியைப் பிடுங்கி சுத்தம் செய்து, அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து நெல்லிக் காயளவு எடுத்து காலை மாலை என  இரு வேளைகள் சில நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதன்மூலம் பெரும்பாடு குணமாகும்.(601)

 

18.  பருத்தி இலைச் சாறினை எடுத்து அதைப் பசும்பாலில் கலந்து பருகி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு தீரும்.  (593) (1910)

 

19.  மாமரத்தின் வேர்ப் பட்டையை எடுத்து சிதைத்து கஷாயம் செய்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, பெரும்பாடு ஆகியவை தீரும்.  (1516)

 

20.    வல்லாரை இலை, உத்தாமணி இலை இரண்டையும் நிழலில் காயவைத்து பொடி செய்து    ஒன்றாகக் கலந்து அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு வலி குறையும். (585)

 

21.  வாழை மரத்தின் இளம் பூவைப் புட்டிட்டுச் சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க பெரும் பாடு தீரும்; வெள்ளைப் படுதலும் நீங்கும்.

 

22.  வாழைப் பழத்தில் ஏலக்காய்ப் பொடியைத் தூவி அல்லது ஏலக்காய் பொடி சேர்த்துப்  பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு கட்டுப்படும்.  (596)  (1921) (2025)

 

23.  விளாம் பிசினை உலர்த்தி இடித்து தூள் செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் உண்டு வந்தால் விந்து ஒழுக்கு நிற்கும்.  (523)  பெரும்பாடு தீரும்.  (1548)  நீர் எரிச்சல்குணமாகும்.  (1647)  உள் உறுப்பு இரணம் தீரும்.  (1661)

 

24.  வில்வ இலைக் கொழுந்து அரைத்து ஒரு கிராம் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டால் பெரும்பாடு தீரும்.  (1522)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,கடகம் (டி )16]

{01-08-2021}

==========================================================