மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தலை - பாரம் (Heaviness)

 

01.    அதிமதுரம், சிற்றரத்தை, திப்பிலி, பனங்கற்கண்டு தலா 100 கிராம் எடுத்து, பொடித்து, தினமும் 2 கிராம் காலை மாலை என 2 வேளைகள் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், சைனஸ், தும்மல், தலை பாரம் குறையும்

 

02.    ஓமவல்லி இலைகளைத் தண்ணீரில்  போட்டுக் கொதிக்க வைத்து, அதிலிடுந்து வரும் ஆவியை முகர்வதால் தலைபாரம் நீங்கும்.

 

03.  கண்டங்கத்தரி வேர், சிற்றரத்தை, சுக்கு, சோம்பு ஆகியவை தலா 20 கிராம் எடுத்து பால் விட்டு அரைத்து 250 மி.லி நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், தலைவலி, தலை பாரம், தும்மல் ஆகியவை குணமாகும்.

 

04.  திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி அடிக்கடி மோந்து பார்த்தால் தலை பாரம் நீங்கும்.(412)

 

05.  தும்பைப் பூவை நல்லெண்னையில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், தலை பாரம் நீங்கும்.(929) (1122)

 

06.    துளசி இலையை நீர் விட்டு நன்கு அரைத்து தலையில் பற்று இடுவதால், தலை பாரமும், தலை வலியும் குறையும்.

 

07.  நொச்சி இலையை அரைத்து உப்புப் போட்டு வதக்கி இளஞ் சூட்டுடன் நெற்றியில் பற்றுப் போட்டால், தலை பாரம் நீங்கும்.(409)

 

08.  நொச்சி இலையைக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு செங்கல்லை அதன் மீது வைத்து ஆவி பிடித்தால் தலை பாரம் நீங்கும்.(404)


09.  நொச்சி இலையை உப்புப் போட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் நெற்றியில் பற்றுப் போட்டால் தலைபாரம் நீங்கும்.  (409)

 

10.  மிளகினை (ஐந்தாறு மிளகு) ஒரு ஊசியில் கோத்து நல்ல விளக்கில் காட்டி சுட்டு, அதிலிருந்து எழும் புகையை மூக்கில் இழுத்தாலும் தலை பாரம் நீங்கும்..

 

11.    மிளகுப் பொடி அரை கிராம் எடுத்து ஒரு கிராம் வெல்லம் அதனுடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

 

12.  விரலி மஞ்சளில் விளக்கெண்ணெய் தடவி திரி விளக்கில் காட்டினால் புகை வரும். இந்தப் புகையைச் சுவாசிப்பதனால் தலை பாரம் குறையும்.(400)

 

13.  விரலி மஞ்சளை எடுத்து எள் எண்ணெயை அதைச் சுற்றிலும் தடவி நல்ல விளக்கில் மஞ்சளைச் சுட்டு அதிலிருந்து எழும் புகையை மூக்கின் வலப்பக்கம் இடப்பக்கமாக இரு துளைகளிலும் மாறி மாறி உள்ளுக்கு இழுக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் இரண்டு நாள்கள்  இப்படிச் செய்தால் மூக்கடைப்பு, தலைப் பாரம், சளி, இருமல் எல்லாம் போய்விடும். (ஆதாரம்: ”நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல், பக்கம் 205)


14.  வேப்பம் பிண்ணாக்கை எடுத்து நல்ல விளக்கில்  காட்டி சுட்டு, புகையை மூக்கில் உறிஞ்சினால் தலை பாரம் நீங்கும்.  (1759)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக