மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 4 ஆகஸ்ட், 2021

முகம் - பருக்கள் நீங்க (Pimples)

01.   அம்மான் பச்சரிசி பாலைத் தடவிவர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.

 

02.   அம்மான் பச்சரிசிச் செடியைக் கிள்ளினால் பால் வரும். அந்தப்  பாலைப் பருக்கள் மீது தடவி வந்தால் நாளடைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.(834) (1181)

 

03.   அல்லிப் பூ இதழ்களைச் சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் பருக்கள் மீது தடவி, காலையில் முகம் கழுவி வந்தால், முகப்பருக்கள் மறைந்துவிடும்.( 1111)

 

04.   அவரை இலைச் சாறினைத் தினமும் முகத்தில் பூசிக் காயவிட்டு, பின்பு குளித்து வந்தால், முகப் பருக்கள் மறைந்துவிடும். கரும்புள்ளிகளும் நீங்கும்.(856)

 

05.   இஞ்சித் துண்டு இரண்டு எடுத்து  இடித்துச் சாறு பிழிந்து தெளிய வைத்து, தெளிந்ததைக் கீழே ஊற்றிவிட வேண்டும். அடியில் படிந்துள்ள மண்டியைத் தேனுடன் கலந்து பருக்கள் மீது தடவி வந்தால், விரைவில் பருக்கள் மறைந்துவிடும்.(846)

 

06.   ஈருள்ளியைப் பாலில் வேக வைத்து அரைத்து பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும்(1963)

 

07.   கடற்சங்கினைப் பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால், நாளடைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.(850)

 

08.   கஸ்தூரி மஞ்சள் பொடி சிறிதளவு எடுத்து, கோரைக் கிழங்குப் பொடி, சந்தனப் பொடி, ஆகியவற்றுடன் பாலும் சேர்த்து நன்றாகக் கலந்து வாரம் ஒரு முறை முகத்தில் பூசி சுமார் பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகச்சுருக்கம், மரு, முகப்பரு ஆகியவை நீங்கும்.

 

09.   கானவாழை இலையைக் கசக்கி முகப் பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும்.

 

10.   குங்குமப்பூ, மஞ்சள் இரண்டையும் தண்ணீரில் கலந்து குழைத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பன நீரில் கழுவி வந்தால் முகப் பருக்கள் விலகும்.

 

11.   கொத்துமல்லி இலைச் சாறுடன் சிறிது  மஞ்சள் கலந்து முகத்தில் பூசி வந்தால், பருக்கள் மறைந்து முகம் பள பளக்கும்.

 

12.   கொய்யா இலையில் வைட்டமின்சிஇருப்பதால், முகப்பரு உண்டாவதைத் தடுக்கிறது.

 

13.   கொள்ளுக் காய்வேளைச் செடியின் வேரை எடுத்து வந்து  அரைத்து மோரில் கலக்கி அருந்தி வந்தால் வீக்கம், பாண்டு, இராஜபிளவை, முகப்பரு ஆகியவை குணமாகும்.(1703)

 

14.   சந்தனக் கட்டையை  எலுமிச்சம்பழச் சாற்றில் உரசி, அந்தத் தேய்வை, பருக்கள் மீது தடவி வந்தால், முகப் பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்,(853)

 

15.   சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவை எடுத்து அரைத்து பருக்களின் மேல் தடவி வந்தால், பருக்கள் மறையும்.(1179)

 

16.   சிறு தேள்கொடுக்கு இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவி வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்துவிடும்.(859)

 

17.   சீரகத்தை எருமைப் பால் விட்டு மைய அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறைந்துவிடும்.(848)(1790)

 

18.   திருநீற்றுப் பச்சிலைச் சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்து, சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் மாறும்.

 

19.   திருநீற்றுப்பச்சிலைச் சாற்றுடன் வசம்புப் பொடியையும் குழைத்து முகப்பருக்கள் உடையவர்கள் பூசி வர முகப்பரு விரைவில் மறையும்.

 

20.   துத்தி இலையையும் வெள்ளைப் பூண்டையும் நறுக்கி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தினசரி பரு மீது தடவி வந்தால் முகப் பருக்கள் நீங்கும்.  (830)

 

21.   துத்தி இலையை அரைத்து காடியில் கரைத்து முகப் பருக்கள் மீது தடவி வந்தால் பரு மறைந்துவிடும்.(832)

 

22.   பப்பாளிச் சாறினை முகத்தில் தடவி வந்தால், முகம் மாசு மரு இல்லாமல் இருக்கும். முகப்பரு குறையும்.

 

23.   புதினா இலையை மை போல் அரைத்து தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் பருக்கள் மீது தடவி, காலையில் முகம் கழுவினால், முகப்பருக்கள் மறைந்துவிடும்.(835)

 

24.   புனுகினை [ சுத்தமான புனுகு தேவை ] பருவின் மீது தடவி வந்தால், நாளடைவில் முகப்பரு மறைந்துவிடும்.(640) (828) (1776)

 

25.   மஞ்சள், சந்தனவாகை, புளியாரைச் செடி  ஆகியவற்றைத் தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர. முகப்பரு நீங்கி, மாசு மரு உதிர்ந்து முகம் பளபளக்கும்.(844)

 

26.   மரப்பாச்சியை நீர்விட்டுக் கல்லில் உரசி, அந்தத் தேய்வினை எடுத்து பருக்கள் மீது தடவி வந்தால், நாளடைவில் முகப்பருக்கள் மறைந்துவிடும்.  (847) (1789)

 

27.   மருத மரப் பட்டைப் பொடியை தேன் கலந்து முகப்பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் மறையும்.

 

28.   மாசிக்காய்ப் பொடி சிறிதளவு எடுத்து சாதிக்காய்ப் பொடி, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து இரவு நேரத்தில் முகத்தில் பூசி, காலையில் கழுவவும். முகப்பரு மறையும்.

 

29.   மாதுளைச் சாறு ஒரு தேக்கரண்டி, பயற்ற மாவு ஒரு தேக்கரண்டி, அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு குளிக்கவும். வாரம் இரண்டு, மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், பருக்கள் மறைந்து விடும்.

 

30.   வசம்பு, கொத்துமல்லி விதை, லோத்திரப் பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூசினால் முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகு பெறும்.

 

31.   வெந்தயத்தை நன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும்.

 

32.   வெந்தயம் இரண்டு தேக்கரண்டி எடுத்து இரவில் ஊற வைத்து காலையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரில் பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி வந்தால் முகப் பரு குணமாகும்.

 

33.   வெள்ளைப் பூண்டினை எடுத்துப் பாலில் வேகவைத்து, மைய அரைத்து பருக்களின் மீது தடவிவர, நாளடைவில் பருக்கள் மறைந்துவிடும்.(857)

 

34.   வெள்ளைப் பூண்டையும் துத்தி  இலையையும் நறுக்கி, நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி, தினசரி முகப்பரு மீது தடவி வந்தால் நாளடைவில் பரு மறைந்துவிடும்.(830)

 

35.   ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்துப் பருக்கள் மீது தடவி வந்தால், நாளடைவில் முகப் பருக்கள் மறைந்துவிடும்.(840) (1179)

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )19]

{04-08-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக