01. அழிஞ்சல் இலைகளை அரைத்து ஒரு கிராம் அளவுக்கு எடுத்து காலை மாலை இரு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்து வந்தால், கிராணி (கழிச்சல்), குன்மம் (வயிற்று வலி), கப நோய்கள் குணமாகும்.(325)
02. இஞ்சிச்சாற்றைத் தொப்புளைச் சுற்றித் தடவினால் உண்ட
உணவு செரிக்காமல் ஆகும் பேதி சரியாகும்.(1222)
03. ஓமத்துடன் மாம்பருப்பு, மாதுளம் பூ ஆகியவை சேர்த்துப் பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால் கழிச்சல் குணமாகும்.(698)
04. கடுக்காயை எடுத்து அதன் மேல் தோலை மட்டும் சீவி இடித்துத் தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு முற்றிய தேங்காயை எடுத்து அரைத் தம்ளர் பால் பிழிந்து அதில் அரைத் தேக்கரண்டி கடுக்காய்த் தோல் பொடியை இட்டுக் கலக்கிக் குடிக்க வேண்டும். இவ்வாறு காலை மாலை என மூன்று நாள்கள் குடித்து வந்தால் பேதி சரியாகும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல், பக்கம் 164 & 165)
05. காக்கிரட்டை விதையை இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து ஒரு கிராம் முதல் கால் தேக்கரண்டி கொடுக்க நன்றாகப் பேதியாகும்.
06. குப்பைமேனி இலைச் சாறு அல்லது குடிநீர் செய்து சிறியவர்களுக்கு 2 தேக்கரண்டி வரைக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்யும்;
07. கொள்ளினை எடுத்து
நீரில் இட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் கழிச்சல் குணமாகும்.
08. கொய்யா வேரை எடுத்து சிதைத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து காலையில் அந்த நீரை எடுத்து அருந்தினால் பேதி நிற்கும்.(1317)
09. சாதிக் காயைத் தண்ணீர் விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றிப் பற்றுப் போட்டால் பேதி நிற்கும்.(722)
10. சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளைஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் வறுத்து இடித்த சூரணம் காலை மாலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வந்தால் பேதி, மூலம், பசியின்மை, மார்புச்சளி
தீரும்.
11.
திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால்
கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம்
அருந்தி வந்தால் வெட்டை நோய்கள், மேக சம்பந்தமான
நோய்கள், பீனிசம், நாட்பட்ட கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள்
முதலியவை குணமாகும்.
12. துத்தி இலையின் சாறு இருபத்தி நான்கு கிராம், நெய் பன்னிரண்டு கிராம், கலந்து உட்கொண்டு வந்தால் கழிச்சல்
குணமாகும்.
13. நாயுருவி விதை 10 கிராம் எடுத்து, அரைத்து, காலை
மாலை 2 நாட்கள் சாப்பிட்டால் பேதி தீரும்.
14. நாவல் கொழுந்தினை எடுத்து நசுக்கி சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவில் குடித்தால் பேதி கட்டுப் படும். காலை மாலையாக மூன்று நாட்கள் இவ்வாறு குடிக்க வேண்டும்.
15. நிலவேம்பு இலைச் சாற்றைக் குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப் பொருமலுக்கும், கழிச்சல்கட்கும் தரலாம்
16. பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வந்தால் குளிர் சுரம், வாத சுரம், முறைச் சுரம், மலக் கழிச்சல் ஆகியவை தீரும்.
17. மாதுளம்பூ, ஓமம், மாம்பருப்பு சேர்த்துப் பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல் குணமாகும். (698)
18. மாம்பருப்பைப் பொடி செய்து பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பேதி குணமாகும்.
(1147)
19. மாம்பருப்பை எடுத்து பசும்பால் விட்டு அரைத்து, பசும் பாலுடன் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பீச்சி அடிக்கும் பேதி உடனே நிற்கும்.
(104) (661)
20. வசம்புத் துண்டுகளை ஐந்தாறு
எடுத்துப் பொடி செய்து சம அளவு வேப்பிலை சேர்த்து அரைத்து, அதில் ஒரு சுண்டைக் காய் அளவு எடுத்து சிறிது தேனுடன் சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். உடனே பேதி நின்றுவிடும். இம்மருந்தை காலை மாலையாக இரண்டு நாள்கள் கொடுத்து விட்டால் பேதி முற்றிலும் நீங்கிவிடும். மறுபடியும் வரவே வராது (ஆதாரம்: “நாட்டுமருத்துவ மணி நாகம்மா” நூல் பக்கம் 175)
21.
விளாங் காயை அரைத்து மோரில் கலக்கிக் குடித்து வந்தால், நாள்பட்ட பேதி சரியாகும்.
22. வில்வ மரத்தின் வேர்த் தூள் இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டின் காரணமாக உருவாகிய பேதி குணமாகும். (102)
23.
வெந்தயத்தை
அரைப்பிடி எடுத்து நெய் விட்டு வறுத்து, ஆறிய பின் பொடித்து ஒரு தேக்கரண்டி பொடி எடுத்து ஒரு தம்ளர் மோரில் கலந்து காலை மாலையாக இரண்டு நாள்கள் குடித்து வந்தால் பேதி குணமாகும். பேதியாகும் போது பால் சேர்க்கக் கூடாது. (ஆதாரம்: “நாட்டு மருத்துவமணி நாகம்மா” நூல், பக்கம் 166 & 167)
24. வேப்பிலையும் வசம்பும் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் பேதியை நிறுத்தும். (1757)
=========================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01).அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவஅதிகாரி, டாக்டர். வெ .ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்
2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப்
பெற்றவை !
(03).அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]
{01-09-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக