மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 30 மே, 2021

உடல் - எடை குறைய ! (To reduce Body Weight)

01.   அமுக்கராங் கிழங்கைப் பாலில் வேகவைத்து, அலம்பி, உலர்த்திப் பொடி செய்து ஒரு வேளைக்கு 3 முதல் 5 கிராம் வரை தேனில் கலந்து கொடுத்தால், வாதம், கபம் இவற்றால் பிறந்த நோய்கள் நீங்கும். வீக்கம், பசியின்மை, உடல் பருமன்  ஆகியவை போகும்.

 

02.   அமுக்கரா வேரும் பெருஞ்சீரகமும் சேர்த்து பாலில் கலந்து காய்ச்சித் தினசரி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.(1680)

 

03.   அறுகம்புல் சாறு, பூசணிச் சாறு, வாழைத் தண்டுச் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் சதை போடுவதைக் தடுக்கலாம்.(1056)

 

04.   இலந்தை இலைகளைப் பறித்து குடி நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட்டு, மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.(1710)

 

05.   எலுமிச்சம்பழச் சாறினை தினமும் காலையில் நீரில் கலந்துகுடித்து வந்தால் உடல் எடை குறையும். நஞ்சுகள் வெளியேற்றப்படும். கல்லீரல் ஆரோக்யமாக இருக்கும்.

 

06.   கடுக்காய்ப் பொடி, தான்றிக் காய், நெல்லிக்காய் ஆகியவற்ரைப் போட்டுக் கசாயம் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.(1709)

 

07.   கற்றாழைச் சோறு துண்டுகளை எடுத்துக் கழுவி தினசரி 3 அல்லது 4 துண்டுகளை விழுங்கினால் உடல் பருமன் குறையும்.

 

08.   கொய்யா இலைத் தேனீரானது உடல் எடையைக் குறைப்பது ஜப்பானில் நடத்திய ஆய்வில், உறுதியானது. ஆனால் கர்ப்பினிகள் இதைச் சாப்பிடக் கூடாது.

 

09.   கொள்ளுப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து, அதே அளவு சீரகப் பொடி சேர்த்து வெந்நீரில் இட்டுக் கொதிக்க வைத்து அதை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

 

10.   கொள்ளு ரசம் வைத்து உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.(1711)

 

11.   கொள்ளு (எனும் தானியத்தை) ஊறவைத்து முளை கட்டி சுண்டல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.(1712)

 

12.   சீரகத்தை வாழைப் பழத்துடன் சேர்த்து, சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

 

13.   சுக்குப் பொடி 200 கிராம், திப்பிலிவறுத்த மிளகுஅதிமதுரப் பொடிசிறியா நங்கைப்பொடி தலா 25 கிராம்,இந்துப்பு 5 கிராம் எடுத்து கலந்து வைத்துக் கொண்டு, காலை மற்றும் இரவு, உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து தேன்கலந்து உட்கொண்டு, வெந்நீர் குடித்தால் உடல் பருமன் குறையும்..

 

14.   சுண்டைக்காய் வற்றலைப் பொடித்து தினமும் காலையில் ஐந்து கிராம் வீதம் உட்கொண்டால் உடல் பருமன் குறையும்.

 

15.   சோம்பு சிறிதளவு, கடுக்காய்ப் பொடி சிறிதளவு, இரண்டையும் மண் சட்டியில் போட்டு தண்ணீர் சிறிதளவு விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி, சுத்தமான தேன் கலந்து தினமும் இரு வேளைகள் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

 

16.   திரிபலாசூரணத்தை நீரில் இட்டுக் கலக்கி வெறும் வயிற்றில் சிறிதளவு குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

 

17.   துளசிச் சாறும், எலுமிச்சைச் சாறும் ஒவ்வொரு தேக்கரண்டி டுத்து சிறிது சூடு படுத்தி, தேன் கலந்து, உணவுக்குப் பின்பு சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

 

18.   பொன்னாவாரைக் கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் அளவுக்கு அதிகமாக இருக்கும் உடம்பு குறைந்து (எடை குறைந்து) நலம் பெறலாம். (1058) (1306)

 

19.   மணித் தக்காளிக் கீரை 100 கிராம், வெங்காயம் 2, பாதி மூடி எலுமிச்சைச் சாறு  சேர்த்து கசாயம் வைத்து, காலை உணவுக்குப் பின் குடித்து வந்தால் உடல் மெலியும்.


=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

 

==========================================================


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக