01. அந்தி மந்தாரை இலை மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடு காட்டி, கட்டி மீது வைத்துக் கட்டினால், கட்டி குணமாகும்.(1019)
02.
அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்துப் பூசினால் கட்டி உடைந்து குணமாகும். [கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும். இதற்குத் தீர்வே அல்லி மற்றும் அவுரி இலை வைத்தியம். ]
03. அவரைக் கொட்டை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தயிர் அல்லது மோர் விட்டு சிறிது மஞ்சள், சிறிது உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். மைபோல வந்தவுடன் கட்டி மீது பூசிட வேண்டும். மூன்று நாளில் கட்டி அமுங்கிவிடும் அல்லது பழுத்து உடைந்து விடும். [ஆதாரம் : ( “நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல் )]
04. எருக்கு இலையின் பின் புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால், கட்டிகள் பழுத்து உடையும்.(571)
05. எருமைத் தக்காளிக் காயையும் இலைகளையும் சேர்த்து மஞ்சள் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து பற்றுப்போட்டு வந்தால் மூட்டு வலி நீங்கும். கட்டிகள் கரையும். புண்கள் ஆறும்
06. எலியாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட, கட்டிகள் கரையும்; வலி அடங்கும்.
07. கடுகைத் தேனுடன் சேர்த்து அரைத்துப் பசையாக்கிப் பூசினால் கட்டிகள் உடையும்.
08. காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணெயில்
வதக்கிக் கட்ட,கட்டிகள் கரையும்; வலி அடங்கும்.
09.
கிரந்தி நாயகம் என்ற செடியின் இலைகளை அரைத்துக் கட்டியின் மீது பூசினால், அல்லது கட்டிகளின் மீது வைத்துத் துணியால் கட்டுப் போட்டால், கட்டிகள் பழுத்து உடையும்.(449)(813)
10. குப்பைமேனி இலையைச் சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் பூசலாம். இதையே காது வலிக்கு காதைச் சுற்றிப் பூச, நோய் தணியும்.
11. கேழ்வரகு மாவினை எடுத்து சிறிது நீர் விட்டுக் கரைத்து அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைத்துக் களியாக்கி, அத்துடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசைந்து பசை போல் ஆக்கி இளஞ் சூட்டில் கட்டிகளின் மேல் பற்றுப் போட்டால், கட்டி உடைந்து சீழ் வெளியேறி புண் குணமாகும். வலி தணியும். வீக்கம் குணமகும்.
12. கொத்துமல்லி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் விலகும். .கொத்துமல்லி இலைகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், கட்டிகள் கரையும்
13. சதகுப்பை இலைகளை சிறிது விளக்கெண்ணெய் தடவி வதக்கி, கட்டிகள் மேல் கட்டி வந்தால், கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.
14. சப்பாத்திக் கள்ளியின் பூக்கள் அல்லது இலையினை நசுக்கி கட்டியின் மீது வைத்துத் துணியால் கட்டுப் போட்டால், கட்டி பழுத்து உடையும். (450) (996)
.
15. சித்திரமூலம் தழையை ஒரு கைப்பிடி கொண்டு வந்து சம அளவு பழுப்பு வெற்றிலையுடன் கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து கட்டி மீது வைத்துக் கட்டினால் மூன்று நாளில் கட்டி அமுங்கிவிடும் அல்லது பழுத்து உடைந்து விடும்.[ ஆதாரம் : ( “நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல் )]
16. சிலந்தி நாயகம்
இலையைக் கொண்டு சாறு எடுத்து 200 மி.லி. காய்ச்சிய பசும்பாலில் 1 தேக்கரண்டி அளவு சாற்றைக்
கலந்து கொடுத்து வந்தால் இரத்தத்திலுள்ள கட்டிகளை உற்பத்தி செய்யும் நுண்ணிய
கிருமிகளை அழித்து கட்டிகளை ஆற்றிவிடும். அதோடு இந்தச் சாற்றைக் கட்டியின் மேல் கனமாகப் பூசிவர வேண்டும். மருந்தை தினசரி காலை மாலை கட்டி குணமாகும் வரை
கொடுத்துவர வேண்டும்.
17. சிலந்திநாயகம் இலைகளை அரைத்துக் கட்டிகளின் மீது தடவினால், கட்டிகள் பழுத்து உடையும்.(443)
18. சிவனார்வேம்பு இலைகளை அரைத்துக் கட்டிகள் மீது பற்றுப் போட்டால், கட்டிகள் பழுத்து உடையும்.(997)
19. சீரகத்தை சிறிது நீர் விட்டு அரைத்து, களியாகக் கிளறி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டினால் வலி, வீக்கம் குறையும்.
20. துத்தி இலை ஒரு கைப்பிடி பறித்து வந்து சற்று இடித்து, ஒரு எலுமிச்சம் பழம் அளவுக்கு வெல்லம் சேர்த்து கரண்டியில் வைத்து நெருப்பில் காய்ச்சினால் மெழுகு பதமாக வரும். அப்போது அந்த மருந்தை பொறுக்கும் சூட்டில் வெற்றிலையில் வைத்துப் பரப்பி கட்டியின் மேல் வைத்துத் துணியால் கட்டி விட வேண்டும். மூன்று நாட்களுக்குள் கட்டி உடைந்து விடும். முளைப் பகுதி வெளியேற வில்லை எனில் முளையை மறைக்காமல் மறு படியும் இதே மருந்தை வைத்துக் கட்டி விட வேண்டும். மூன்று நாள் சென்ற பின் கட்டைப் பிரித்து அழுத்தி முளையை பிதுக்கி எடுக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் பஞ்சை நனைத்து கட்டி இருந்த பகுதியைத் துடைத்து விட வேண்டும். புளியம் பட்டையை இடித்துச் சலித்த தூளைப் புண் மீது அடிக்கடி தூவி வர வேண்டும். [ஆதாரம் : ( “நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல் )]
21. துத்தி இலையை இடித்துப் பிழிந்த சாற்றை அரிசி மாவுடன்
கலந்து களியாகக் கிண்டி எளிதில் பழுக்காத கட்டிகளின் மீது
பூசி, கட்டிவந்தால் அவை எளிதில் பழுத்து உடையும்.
22.
தேள்கொடுக்குச்
செடியின் துளிர் இலைகள், திப்பிலிப் பொடி, மஞ்சள் பொடி, தேன் எடுத்துக்கொள்ளவும். 2 அல்லது 3 இலைகளுடன் சிறிது திப்பிலி, மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிக்கட்டி
தேன் சேர்த்து குடிக்கலாம். இதனால் காசநோய் கட்டிகள் சரியாகும்.
23. நாகதாளி எனப்படும் சப்பாத்துக் கள்ளியின் பூக்களைப் பறித்து வந்து கல்லின் மீது அரைத்தால் கொழகொழவென வரும். அதை வழித்துக் கட்டி மீது பூச வேண்டும். முதலில் சில்லென்று இருக்கும். சற்று நேரத்தில் காய்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். மூன்று நாள் கழித்து வெதுவெதுப்பான நீர் விட்டு ஊறவைத்து மருந்துப் பற்றினை எடுத்து விட்டு மீண்டும் ஒருமுறை மருந்துப் பற்று இட வேண்டும். அடுத்த மூன்றாம் நாள் கட்டி முழுவதுமாக அமுங்கிவிடும்.[
ஆதாரம் : ( “நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல் )]
24. நீர் பிரம்மி (சாம்பிராணிப் பூண்டு) முழுத் தாவரத்தையும் ஆமணக்கு எண்ணெயில் வதக்கி வீக்கம், கட்டிகள் உள்ள இட்த்தில் ஒற்றடம் இட்டு பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்டினால் வீக்கம், கட்டிகள் கரைந்து போகும்.
25. நொச்சித் தழை ஒரு பிடி, பழுப்பு வெற்றிலை பத்து, ஆகியவற்றுடன் உரித்த வெள்ளைப் பூண்டுப் பற்கள் மூன்று, சிறிதளவு உப்பு ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து, இடித்த கலவையை ஒரு பழுப்பு வெற்றிலையில் வைத்து, சிறிது பரப்பி கட்டி வந்துள்ள இடத்தில் வைத்து துணியைப் போட்டுக் கட்டி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என மூன்று முறை மருந்துக் கட்டுகள் போட வேண்டும். கட்டிகள் அமுங்கி விடும். [ஆதாரம் : ( “நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல் )]
26. பழம்பாசி இலையுடன் சிறிது பச்சரிசி சேர்த்து அரைத்துக் குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.
27. பழம்பாசி இலைகளை எடுத்து கட்டிகள் மீது வைத்து கட்டுப் போட்டால், கட்டிகள் பழுத்து உடையும்.(1031)
28. மாவிலங்க மரப் பட்டையைச் சிதைத்து அல்லது பட்டையின் உட்புறம் கட்டியின் மேல் படுமாறு வைத்துக் கட்டிவிட்டால், கட்டிகள் கரையும்.
29. மிளகாய்ப் பூண்டு இலைக் கசாயம் மூன்று வேளைகள் குடித்தால் கட்டிகள் கரையும்.
(1547)
30. விராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.
31. வெந்தயத்துடன் சீமை அகத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து கட்டிகளின் மீது வைத்து துணியால் கட்டுப் போட்டால், கட்டிகள் பழுத்து உடையும்.(465)
.
32. வெள்ளைத் தாசாளம் பூ அல்லது வெள்ளைச் செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து கம்பு மாவில் பிசைந்து அடை சுட்டுச் ஏழு நாட்கள் சாப்பிட்டால் மீண்டும் கட்டி வராது. தாசாளம் பூ அடையை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட வேண்டும். [ஆதாரம் : ( “நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல் )]
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )17]
{31-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக