01. அவரி வேர் 100 மி.மீ நீளம் எடுத்து, சிறிது சுக்கையும் சேர்த்து, இரண்டையும் சிதைத்து 150 மி.லி.நீரில் போட்டு 50 மி.லி யாகக் காய்ச்சி ஒரு வேளை கொடுத்தால் சுரம் நீங்கிவிடும்.
02. அவரி வேர் ஒரு துண்டும், சுக்கு சிறிதும் எடுத்து, இரண்டையும் நசுக்கி, 200 மி.லி.நீரில் இட்டு 50 மி.லி யாகக் காய்ச்சி ஒருவேளை உள்ளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் உடனடியாக நீங்கும்.
03. ஆடாதொடைத் தண்டின் பட்டையை
எடுத்து குடிநீர் செய்தாகிலும், பொடி செய்தாகிலும் சுரம், இருமல், இளைப்பு, இரைப்பு ஆகிய நோய்களுக்குக் கொடுக்கலாம்.
04. ஆடாதோடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் ஆகியவை வகைக்கு 30 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டுஅரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 60 மி,லி வீதம் பருகி வந்தால் எவ்விதச் சுரமும் நீங்கும். (அஷ்ட மூலக் குடிநீர்)
05. உத்தாமணி இலைகளை அரைத்து இரண்டு தேக்கரண்டி சாறு எடுத்து சம அளவு தேன் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.(177)
06. கண்டங்கத்தரி, பற்படாகம், ஆடாதொடை, சுக்கு, விஷ்ணுகிராந்தி ஆகியவற்றை சம அளவு எடுத்து கசாயம் வைத்து 50 மி.லி அளவுக்குக் குடித்தால் நச்சு சுரம் குணமாகும்.((1469) (1686)
07. காக்கரட்டான் பச்சை வேர் 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி யாகக் காய்ச்சி 30 மி. லி வீதம் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் சுரம் தீரும்.
08. கானவாழை சமூலத்தை ( வேர், இலை, தண்டு, பூ உள்ளிட்ட முழுச்செடி ) குடிநீராக்கிக் குடிக்க எளிய சுரம் போகும்.
09. கீழா நெல்லிச் சமூலம் 30 கிராம் நான்கு மிளகுடன் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி , மூன்று வேளைக் குடித்து வர, சுரம் தீரும்.
சந்தனத் தூள் 30 கிராம், 300 மி.லி நீரில் போட்டு 150 மி.லி யாகக் காய்ச்சி வடிக்கட்டி 50 மி.லி வீதம் மூன்று வேளை குடித்தால் காய்ச்சல் தீரும்.
10.
கீழாநெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து 2 குவளை நீரில் போட்டு ஒரு குவளையாகக் காய்ச்சி
மூன்று வேளையாகக் குடித்து வர சூடு, சுரம், தேக எரிச்சல் தீரும்.
11. கீழாநெல்லியின் இலையையும் வேரையும் குடிநீர் செய்து சுரங்களுக்குச் சூட்டோடு கொடுக்க காய்ச்சல் தீரும்.
12. கொய்யா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் கசாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
13. கோரைக் கிழங்கு கழாயம் குடித்தால் எப்படிப் பட்ட காய்ச்சலும் குணமாகும். (178) (180) (1917)
14. கோரைக் கிழங்கு, திரிபலா, திராட்சை, பேய்ப்புடல், வெப்பாலை, வேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றும் சம அளவு சேர்த்துக் காய்ச்சி அருந்தினால் காய்ச்சல் தணியும்.
15. சிற்றரத்தைப் பொடி ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால், சுரம், சளி, ஈளை, இருமல், தொண்டைப் புண், நீர்க்கோவை, வாயு நீங்கும்.(120)
16. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு எடுத்துப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் காய்ச்சல் நீங்கும்.(175)
17. சுண்டை வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மி.லி அளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் காய்ச்சல் கட்டுப்படும்.
18. சுரம் இருக்கும்பொழுது காலையில் ஒரு தேக்கரண்டி அளவு பப்பாளி இலைச் சாறு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சுரம் தணியும்.
19. செம்பருத்திப் பூ
ஐந்து கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி
எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம் இதனால் உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும்
இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.
20. திப்பிலிப் பொடி கால் தேக்கரண்டி எடுத்து தேநீர் மற்றும் இஞ்சி சுரசத்தில் கலந்து மூன்று நாள் இரு வேளை கொடுத்து வந்தால் காய்ச்சல் தீரும்.
21. திப்பிலிப் பொடியை அரைத் தேக்கரண்டி எடுத்து தேன் மற்றும் கம்மாறு வெற்றிலைச் சாறுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல், சுரம் ஆகியவை குறையும்.
22. துளசி இலை 50 மிளகு 20 மையாக அரைத்து பச்சைப் பயறு அளவு மாத்திரை ஆக்கிக் காலை மாலை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலக் காய்ச்சலும் தீரும்.
23. துளசி இலை அரைப்பிடி எடுத்து சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி. யாக காய்ச்சி வடிக்கட்டி, 15 கிராம் கற்கண்டு, 10 மி.லி. தேன் கலந்து தினம் நான்கு வேளை 30 மி.லி வீதம் குடிக்கக் காய்ச்சல் தீரும்.
24. நந்தியாவட்டை இலைக் கசாயத்தை 50-60 மி.லி வீதம் குடித்து வந்தால் சுரம் தணியும்.
25. நல்ல வேளைச் சாறு பத்து துளி தாய்ப் பாலில் கலந்து, பிறந்த குழந்தைக்குக் கொடுத்தால் சுரம் நீங்கும்,
26. நல்ல வேளைச் செடியின் பூ எடுத்து சாறு பிழிந்து 10 துளி தாய்ப் பாலுடன் கொடுக்க, காய்ச்சல் குணமாகும்.(193)
27. நாய்த் துளசியை வேருடன் பிடுங்கி, சுத்தம் செய்து நீரில் இட்டுக் கழாயம் செய்து அருந்தினால் காய்ச்சல் குணமாகும். (183)
28. நாரத்தை இலைகளைக் கழாயம் செய்து குடிக்க காய்ச்சல் நீங்கும்.(170) (1166)
29. நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.
30. நிலவேம்பு சமூலத்தை [முழுத் தாவரத்தையும் ] சேகரித்து குடிநீர் செய்து 30 மி.லி வீதம் காலை மாலையில் 3 நாட்கள் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். இலைகளை அரைத்து சுண்டைக் காய் அளவு காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும்வரை சாப்பிட்டு வர வேண்டும்.
31. நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி வகைக்கு பத்து கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி ஒரு நாளைக்கு 30 மி. லி வீதம் கொடுத்துவரக் குழந்தைகளுக்குக் காணும் சகலக் காய்ச்சலும் தீரும்.
32. நீர் முள்ளி விதை 40 கிராம், நெருஞ்சில் விதை 20 கிராம், வெள்ளரி விதை 10 கிராம் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி யாகக் காய்ச்சிப் பனங்கற்கண்டு கலந்து காலை மாலை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சுரம் தீரும்.
33. நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை ஆகியவற்றைச் சிதைத்து நீர் விட்டுக் கசாயம் செய்து பனங் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சுரம் குணமாகும் (1688)
34. நொச்சி இலையை வெந்நீரில் போட்டு வேகவைத்து நீராவி பிடிக்க, வியர்வை உண்டாகி சுரம் தணியும். வளிக்குற்றத்தால் உண்டான உடல் வலி தீரும்.
35. பவளமல்லி இலை, பவளமல்லி மரப்பட்டை மற்றும் துளசி இலை இவைகளுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து தினசரி காலை மாலையாக மூன்று நாட்கள் 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் சுரம் தணியும்.
36. பற்படாகம், நிலவேம்பு, சுக்கு, அதிமதுரம், சீரகம் வகைக்கு பத்து கிராம் இரண்டு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி தினமும் ஆறு வேளை 20 மி.லி முதல் 50 மி.லி. வரைக் கொடுக்க சுரம் தீரும்.
37. மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி, இடித்து, தூள் செய்து ஒரு தேக்கரண்டி தேன், பால், வெநீர் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொடுக்க, சுரம் நீங்கும்
38. மாவிலங்க இலையை குடிநீரிட்டுக் கொடுக்க, சுரம், செரியாமை போகும். இலையை அரைத்துப் பற்றுப் போட்டால் வீக்கம் கரையும்
39. மாதுளம் பழத் தோல் பொடி, சுக்குப் பொடி, மிளகுப் பொடி, சீரகப் பொடி ஆகியவற்றை நெய்யில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
(1580)
40. மூக்கிரட்டை வேர் 30 கிராம், மிளகு 4, உத்தாமணிச் சாறு 50 மி.லி ஆகியவற்றை 100 மி.லி. விளக்கெண்ணெயில் காய்ச்சி, வாரம் இரு முறை ஆறு மாதக் குழந்தைக்கு 15 மி.லி. ,அதற்கு மேற்பட்ட குழந்தைக்கு 30 மி.லி வீதமும் கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் காய்ச்சல் குறையும்.
41. வல்லாரை, உத்தாமணி, மிளகு சமனெடை கூட்டி அரைத்து குண்டுமணியளவு மாத்திரை வெந்நீரில் கொடுக்கச் சகல காய்ச்சலும் தீரும்.
42. வல்லாரை, உத்தாமணி, மிளகு ஆகியவற்றை அரைத்து பருப்பு அளவு மாத்திரையாக்கி வைத்துக் கொண்டு ஒருமாத்திரை எடுத்து வெந்நீரில்
சாப்பிட்டு வந்தால் எல்லாக் காய்ச்சலும் நீங்கும்.
(1623) (1690)
43. வன்னி மரத்துப் பட்டை 10 கிராம், உப்பு 2 கிராமுடன் சேர்த்து அரைத்து காலை மாலை ஒரு சிட்டிகை சாப்பிட காய்ச்சல் குணமாகும். (107)
44. வில்வ இலை ஒரு பிடியுடன் சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சிக் குடிக்க எவ்விதக் காய்ச்சலும் நீங்கும்
45. வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் எல்லா விதமான சுரமும் குணமாகும்.
(1530) (1684)
46. வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் காலை மாலை நான்கு நாள் கொடுக்க, சுரம் நீங்கும்.
47. வெங்காயச் சாறு அரை அவுன்ஸ் (15 மி.லி.) காலை, மாலை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.
(1685)
48. வெந்தயம் ஒரு தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிய பின் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சம் பழச் சாறு கலந்து அருந்தி வந்தால் சுரம் குறையும்.
49. வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்துத் தூங்கினால் காய்ச்சல் நீங்கும். நன்றாகத் தூக்கம் வரும் (166)
50. வேலிப் பருத்தி இலையை (உத்தாமணி இலை) அரைத்து இரண்டு தேக்கரண்டி சாறு எடுத்து சம அளவு தேனுடன் கலந்து கொடுத்தால் காய்ச்சல் குணமாகும். (177)
51. வேளை (நல்ல வேளை)
இலை, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவை சேர்த்துக் கசாயம் வைத்து குடித்து வந்தால் சளிக் காய்ச்சல் குணமாகும். (1697)
52. வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கினால் காய்ச்சல் நீங்கும். தூக்கம் நன்றாக வரும்.
(166)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )22]
{05-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக