மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 5 ஜூன், 2021

சிறுநீர் - நீர்க்கட்டு (Stranguary)

 

 

01.   அறுகம்புல்லின் வேரெடுத்து கணுவை நீக்கிவிட்டு 10 கிராம் எடுத்து, வெண்மிளகு 2 கிராம் சேர்த்துக் குடிநீரில் இட்டு வடித்து, அதில் 2 கிராம் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள, மருந்தின் தீங்கு, இரச வேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.

 

02.   சிறுகண் பீளை இலைச் சாற்றில் 50 மி.லி வீதம் குடித்துவர பெரும்பாடு, கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் போகும்.

 

03.   சிறுகண் பீளை வேர்ப் பட்டை, பனை வெல்லம் வகைக்கு 50 கிராம் எடுத்துக் கூட்டி மை போல் அரைத்து 50 மி.லி பசுவின் பாலில் கலந்து, காலை மாலைகளில் உட்கொண்டு வர கல்லடைப்பு, நீரடைப்பு, பெரும்பாடு முதலியன நீங்கும்.

 

04.   சிறுகண் பீளையின் வேரை 20 கிராம் எடுத்து, சிதைத்து, ஒரு லிட்டர் நீரில் போட்டு 125 மி,லி யாகக் காய்ச்சி, வடிக்கட்டி காலை மாலை 2 வேளைக் கொடுத்து வர, சிறு நீர்க் கட்டை உடைக்கும்.

 

05.   சிறு நெருஞ்சில் செடியுடன் சமனளவு அறுகம்புல் சேர்த்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, வேளைக்கு 60 மி.லி. வீதம் காலை, மதியம், மாலை 2, 3, நாட்கள் கொடுக்க நீர்ச் சுருக்கு தீரும்.

 

06.   செண்பகப் பூக்கள் ஒன்பது எடுத்து, உள்ளே சுத்தம் பார்த்து, பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு, ஒரு கோப்பைத்தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, அரைக் கோப்பையாகக் காய்ச்சி, வடிகட்டி, காலை, மாலை அரை கோப்பை வீதம் கொடுத்து வந்தால், சொட்டு மூத்திரம், நீர்ச்சுருக்கு இவைகள் மூன்றே நாட்களில் குணமாகிவிடும்

 

07.   செம்பருத்திப் பூவின் கஷாயம் நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு மருந்தாகிறது.

 

08.   துத்தி வேர் முப்பத்து ஐந்து கிராம் திராட்சைப் பழம் பதினேழு கிராம், நீர் எழுநூறு மி.லி சேர்த்து நன்கு காய்ச்சி நூற்று எழுபது மி.லிஆக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளையும் முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வந்தால் தாகம், நீரடைப்பு, மேகச்சூடு, முதலியவை குணமாகும்.

 

09.   தென்னங்காய் (இளங்குரும்பை) மட்டையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து, 100 மி.லி வீதம் தினமும் காலையில்குடித்து வந்தால் நீர்ச் சுருக்குத் தீரும்.

 

10.   தொட்டாற்சுருங்கி வேர் ஒரு பலம் பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் லிட்டர் நீர் விட்டு அடுப்பிலேற்றி நான்கில் ஒரு பங்காகக் காய்ச்சி, வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் (1 Ounce = 28 m.l.) தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற நீர்விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

 

11.   நன்னாரி வேர் ஐந்து  கிராம் எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச் சுருக்கு ஆகியவை குணமாகும்.  (1366)

 

12.   நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டி மூன்று தேக்கரண்டி சாறு எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர்கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். நீர்க்கட்டு தீரும். காலை மாலையாக இரண்டு நாட்கள் குடித்து வர வேண்டும்.

 

13.   நெருஞ்சில் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை 1-1/2 தேக்கரண்டி அளவு இளநீரில் கலந்து சாப்பிட்டு வரச் சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்

 

14.   மணித்தக்காளி வற்றல் 100 கிராம் கொதிக்கிற 500 மி.லி.  வெந்நீரில் சேர்த்து, ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து, வடிக்கட்டி 50 மி.லி அளவு கொடுத்தால் நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு ஆகியவை தீரும்.

 

15.   முடக்கற்றான் கீரையை இரசம் வைத்து உண்டால் சிறுநீர் பெருக்கும், மலமிளக்கும், பசியைத் தூண்டும், வாதத்தை அடக்கும், உடலை வலிமைப்படுத்தும்.

 

16.   மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம் புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீரேற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு, மகோதரம் தீரும்.

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )22]

{05-06-2021}

==========================================================


 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக