மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மூலம் - மூலக் கடுப்பு (Piles - Irritation at Anus)

 

01.   அறுகம்புல் வேரினை எடுத்து அரைத்துப்  பசும் பாலில் சாப்பிட்டு வந்தால், மூலக் கடுப்பு தீரும். இரத்த மூலம் இருந்தால் அதுவும்  குணமாகும்.(371)

 

02.   அறுகம்புல்லின் வேரெடுத்து கணுவை நீக்கிவிட்டு 10 கிராம் எடுத்து, வெண்மிளகு 2 கிராம் சேர்த்துக் குடிநீரில் இட்டு வடித்து, அதில் 2 கிராம் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள, மருந்தின் தீங்கு, இரச வேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.

 

03.   சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து, பொடித்து, உணவுடன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் ஏற்படும் கைகால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப் பொருமல், மூலக் கடுப்பு, மூல நோயால் உண்டாகும் இரத்தக் கசிவு ஆகியவை சீராகும்.

 

04.   சுண்டைக் காயைச் சமைத்து உண்டு வந்தால் மூலக் கடுப்பு குணமாகும்.(1315) கபம் நீங்கும் (1318)

 

05.   துத்தி இலைக் குடிநீருடன் பாலும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டு வர ஆசன வாய்க் கடுப்பு, சூடு முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெறுவார்கள்.. மலத்தையும்  இளக்கும்.

 

06.   துத்திக் கீரையை வேக வைத்துச் சாறு எடுத்து சர்க்கரை சிறிது சேர்த்து, பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலக் கடுப்பு குணமாகும்.(377)

 

07.   பிரண்டை உப்பை இரண்டு கிராம் அளவு வெண்ணெயில் கலந்து ஒரு மண்டலம் (48 நாள்) இரண்டு வேளை கொடுதது வர மூலம், ஆசனவாய் எரிச்சல் மற்றும் மூலக் கடுப்பு தீரும்.

 

08.   மாதுளம் பழச்சாறு 15 மி.லி யில் அளவுடன் கற்கண்டு கலந்து  காலையில் பருக மூலக் கடுப்பு தீரும்.

 

09.   வாழைப் பூ  உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். வாழைப்பூ மலத்துடன் வெளியேறும் இரத்தத்தை தடுக்கும். மூலக் கடுப்பைப்போக்கும்.

 

10.   வாழைப் பூவைப் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலக் கடுப்பு, பிரமேகம், கைகால் எரிச்சல், வெள்ளை ஆகியவை குணமாகும்.(379) (1029) (1632)

 

11.   வெந்நீர்த் தொட்டியில் தொப்புள் வரை மூழ்கி இருக்குமாறு அரை மணி நேரம் இருந்து வந்தால் மூலக் கடுப்பு, வாத வலி, முழங்கால் வலி ஆகியவை தீரும்.  (393)

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக