01. அகத்தி இலைகளை அவித்த தண்ணீரைப் பருகினால் வாய்ப் புண்கள் ஆறும்.(213)
02. அகத்திக் கீரை மற்றும் மணித்தக்காளிக் கீரை சமைத்துச் சாப்பிட்டால், வாய்ப் புண்கள் குணமகும்.(259)
03. அத்தி இலையை அடிக்கடி உண்டால், வாய்ப் புண், உதட்டுப் புண் ஆகியவை தீரும்.(261)
04. அம்மான் பச்சரிசி
இலையச் சமைத்து உண்ண வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு தீரும்.
05. அம்மான் பச்சரிசி இலைப் பொடியைப் பாலில் கலந்து சாப்பிட்டுவர வாய்ப் புண் குணமாகும். ஈறு வீக்கம், தொண்டைப் புண் ஆகியவையும் குணமாகும்.(254)
06. அரசம் பட்டையைக் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால், எப்படிப்பட்ட வாய்ப் புண்ணும் குணமாகும்.(252)
07. அறுகம்புல் சாறுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து பூசி வந்தால், வாய்ப்புண்கள் குணமகும்.(1138)
08. ஆலம் பாலைக் காலை மாலை தடவி வர, வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்
09. ஆவாரம் பட்டையைக் குடி நீரில் ஊற வைத்து, அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் குணமாகும்.
10. எலியாமணக்குப் பாலை வாயில் விட்டுக் கொப்பளிக்க வாய்ப் புண்கள் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும்.
11. ஒதிய மரத்தின் பட்டை அரைக் கைப்பிடி அளவுக்கு எடுத்து வாயில் இட்டு அடக்கிக் கொண்டால், எச்சில் ஊறும் எச்சிலை விழுங்கிக் கொண்டே வர வேண்டும். துவர்ப்புச் சுவயுள்ள ஒதிய மரப் பட்டைச் சாறு வாய்ப் புண்ணை நீக்கும். (ஆதாரம்: நாட்டு மருத்துவணி நாகம்மா” நூல்)
12. ஒதியம் பட்டைக்
குடிநீரால் அல்லது ஒதியம் பட்டையை ஊறவைத்த நீரால் வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும்.(220) (2011)
13. ஒதியம் பட்டையை ஊற வைத்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப் புண்கள் குணமாகும்.(220)
14. கசகசாவை அரைப் பிடி எடுத்து உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து காலை, மதியம், மாலை ஐந்து மணி அளவில் என்று மூன்று வேளைகள் வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். உடனே பனங்கற்கண்டு அரைப் பிடி எடுத்து வாயில் போட்டு எச்சில் ஊற ஊற எச்சிலை விழுங்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் மொந்தன் பழம் அல்லது பூவன் பழம் பாதிப்பழம் எடுத்து தோலை உரித்து விட்டு சுளை மீது ஆலம் பாலைத் தடவி வாயில் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்கி விட வேண்டும். 12 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் வாய்ப் புண், வாய் நாற்றம், குடற் புண் ஆகியவை குணமாகும். சாப்பாட்டில் அரைப்புளி, அரை காரம் சேர்க்கலாம். மோர் நிரம்ப அருந்த வேண்டும். இனிப்பு கூடாது.ஒரு மாதம் இவ்வாறு பத்தியம் கடைப்பிடிக்கவும். (ஆதாரம்: “ நாட்டு மருத்துவமணி நாகம்மா “)
15. கடுக்காய், காசுக்கட்டி சமனளவு
பொடித்துத் தேனில் குழைத்து நாவில் தடவிவர வாய்ப் புண்
தீரும்.
16. காட்டாமணக்குப் பாலை வாயில் விட்டுக் கொப்பளிக்க வாய்ப் புண்கள் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம்
கசியும் புண்களில் வைக்க இரத்தப்
பெருக்கு நிற்கும்.
17. குன்றிமணி இலையைக் கொண்டுவந்து இடித்துப் பிழிந்து சாறு எடுத்து வாய்ப் புண்களுக்குத் தடவினால் புண்கள் குணமாகும்.
18. கொள்ளுக் காய் வேளை ( காவாளைப் பூண்டு ) வேரைக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் தீரும்.(257)
19. கொள்ளுக்காய் வேளை
வேரைச் சிதைத்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும்.
20. கோடசாலை இலையைக் கசாயமாக்கி வாய் கொப்பளித்து வந்தால் நாக்குப் புண், வாய்ப் புண்,
உதட்டுப் புண் ஆகியவை
ஒரு வாரத்தில் குணமாகும்.(214)
21. சித்திரப் பாலாடைக் கீரையைப் பருப்புடன் சேர்த்து
உணவுடன் சேர்த்துக்கொண்டால், வாப் புண்கள் ஆறும். உதடு வெடிப்பும் நீங்கும். (256)
22. சீரகம் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை இலேசாக நெய் விட்டு வதக்கி உண்டால், வாய்ப் புண்கள் குணமாகும்.
23. திருநீற்றுப்
பச்சிலையை மெல்லுவதால் வாய் வேக்காடு தீரும்.
24. தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து இரண்டொரு முறை குடித்து வந்தால், வாய்ப்புண்கள் குணமாகும். (216) (1163)
25. தேங்காய்ப் பாலைத்
தினமும் கொப்பளித்து வர நாக்குப் புண், உதட்டுப் புண், வாய் உள் புண், தொண்டைப் புண், வயிற்றுப் புண் ஆகியவை
தீரும். காரம், உப்பு, புளி நீங்கலாக உணவு கொள்க.
26. நல்லெண்ணையை ஒரு தேக்கரண்டி வாயில் ஊற்றிப் பத்து நிமிடங்கள் வாய்க்குள்ளேயே வைத்திருந்து பின்பு துப்பி விட்டால் வாய்ப் புண்கள் ஆறிவிடும்.
27. நெருஞ்சில் இலைச் சாறு எடுத்து, அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி, அதை எடுத்து வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப்புண்கள் தீரும்.(1159)
28. நெல்லி இலை, மாவிலை ஆகியவற்றை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் தீரும்.(083)
29. நெல்லி இலையை நீரில் போடுக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் தீரும்.
30. நெருஞ்சில் இலைச் சாறை எடுத்துக் காய்ச்சி, வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் ஆறும். (1159) (1897)
31. பப்பாளிப் பாலை
மட்டும் தடவி வர வாய், நாக்கு, தொண்டை, ரணம் தீரும். (084) (1413) (1971)
32. பிரண்டை உப்பு 30 முதல் 50 மில்லி கிரம்
வெண்ணெயில் கலந்து கொடுக்க வாய்ப் புண், நாக்கு, உதடு வெடிப்பு, வாய் நாற்றம் தீரும்.
33. மகிழமரப் பட்டையை எடுத்து சிதைத்து, கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண் ஆறும். (1375)
34. மணிதக்காளி இலைச் சாற்றை வாயில் வைத்திருந்து, கொப்பளித்து, அடக்கி வந்தால், வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றம் அகலும்.
35. மணித் தக்காளி இலையைச் சாறு எடுத்து 30 மி.லி வீதம், மூன்று வேளை தினமும் அருந்தினால் உடல் சூடு அகலும். வாய்ப்புண் ஆறும்.
36. மணித் தக்காளிக் கீரை, ஒரு மிளகாய் வற்றல், சிறிது சீரகம் ஆகியவற்றை எடுத்து எண்ணெயில் வதக்கி, தேங்காய்ப் பால் – தண்ணீர் விட்டு வேக வைத்து உண்டு வாருங்கள். வாய்ப்புண் குறையும்.
37. மணித் தக்காளிக் கீரையைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கள்; வாய்ப்புண் ஆறும்.
38. மருதாணி இலையை
அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தீரும்.
39. மாசிக் காயை அரைத்து தாய்ப் பாலில் கலந்து புண் உள்ள பகுதியில் தடவி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப் புண்கள் தீரும்.(212)
40. மாசிக்காய் அரைப் பாக்கு அளவு எடுத்து உடைத்து வாயில் அடக்கிக் கொள்ள வேண்டும். எச்சில் ஊற ஊற அதை விழுங்கிட வேண்டும். அரை மணி நேரம் மாசிக்காயை வாயில் வைத்திருந்தால் போதும். காலையில் வெறும் வயிற்றில் விழுங்கும் மாசிக்காய் சாறு நல்ல பலனைத் தரும். வாய்ப் புண்கள் குணமாகும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவமணி நாகம்மா ”நூல் )
41. மாவிலை, நெல்லி இலைகளை நீரில் இட்டுக் காய்ச்சி, அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப் புண்கள் தீரும். (083)
42. முருங்கைப் பூவைப்
பருப்புடன் சமைத்து உண்ண வாய் நீர் ஊறல், வாய்க் கசப்பு ஆகியவை தீரும்.
43. ரோஜா இதழ்களை வாயில் இட்டு மென்று தின்றால், வாய்ப் புண்கள் குணமாகும்.(1195)
44. ரோஜாப்பூ கசாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் குணமாகும். (1613)
45. விளாங் காயைத் தயிருடன் சேர்த்து பச்சடி செய்து சாப்பிட்டால், வாய்ப் புண், குடற் புண் (அல்சர்) ஆகியவை குணமாகும்.
===================================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர் .வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில்,
S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
===============================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)17]
{02-09-2021}
==========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக