மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மூலம் - இரத்த மூலம் (Bleeding Piles)

 

01.   அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாம்பட்டை சமனளவு எடுத்து வாழைப் பூச் சாற்றில் அரைத்து சுண்டைக் காயளவு மாத்திரையாக உருட்டி வைத்துக் கொண்டு காலை மாலை வெந்நீரில் சாப்பிட்டால் இரத்த மூலம் தீரும்.

 

02.   அறுகம்புல் 30 கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால், இரத்த மூலம் குணமாகும்.(352)

 

03.   அறுகம்புல் வேரினை மைய அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும். மூலக் கடுப்பு விலகும்.(371)

 

04.   கசகசா, வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு ஆகியவை சம அளவு எடுத்து, பொடித்து, தேன் விட்டுப் பிசைந்து 5 கிராம் அளவுக்கு எடுத்துப் பாலுடன் கலந்து காலை நேரம் மட்டும் சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் தீரும்.(366)

 

05.   கசகசா, வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு சமனெடை எடுத்துப் பொடித்து, தேன் நெய் ஆகியவை சேர்த்து இலேகியப் பதமாகப் பிசைந்து, காலை மாலை ஐந்து கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் தீரும்

 

06.   குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, சீரகம் ஒரு தேக்கரண்டி சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டால் ஒரே வேளையில் கூட மூலத்துடன் இரத்தம் வருவது நின்று விடலாம்.(364) (1954)

 

07.   சீரகத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பொடித்து வாழைப்பழத்தோடு சேர்த்து, இரவு உறங்குதற்கு முன் சாப்பிட்டால், நன்றாகத் தூக்கம் வரும்; காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த மூலம் தீரும்.

 

08.   செந்நாயுருவி இலை 10 கிராம் எடுத்து மென்மையாய் அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து காலை மாலையாக பத்து நாள் கொடுத்தால்  இரத்த மூலம் தீரும்.

 

09.   தான்றிகாய்த் தோலை வறுத்துப் பொடி செய்து , தேன் கலந்து காலை மாலை இரு வேளை சாப்பிட்டால் இரத்த மூலம் நிற்கும்.

 

10.   தான்றிக் காயைக் கொட்டை நீக்கி வறுத்துப் பொடித்து ஒரு கிராம் அளவுக்கு சிறிது சர்க்கரையுடன் காலை மாலை சாப்பிட்டு வர, இரத்த மூலம் தீரும்.

 

11.   தான்றிக்காய், தேற்றான் கொட்டை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துப் பொடி செய்து ஐந்து கிராம் வீதம் காலை மட்டும் சாப்பிடுங்கள். உள்மூலம், வெளிமூலம், இரத்தமூலம் ஆகியவை சீராகும்.

 

12.   துத்தி இலையை ஆமணக்கு நெய் விட்டு வதக்கி, ஒற்றடம் கொடுத்துக் கட்ட, இரத்த மூலம், சீழ் மூலம், மூலத்தில் உண்டாகும் கட்டிகள், புண்கள் நீங்கும்.

 

13.   துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் எடுத்து ஆசன வாயில் கட்டி வந்தால் இரத்த மூலம் குணமாகும். சீழ் மூலம் இருந்தாலும் தீரும்.(355)

 

14.   துத்தி இலையைக் கொண்டுவந்து மண் பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி கை பொறுக்கும் சூட்டில் வாழை இலை அல்லது பெரிய வெற்றிலையில் வைத்து கோவணம் கட்டுவது போன்று துணியை வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இது போன்று தினசரி இரவு படுக்கைக்கு முன்னர் செய்து வந்தால் மூலவீக்கம், வலி, குத்தல், எரிச்சல் ரத்த மூலம், கீழ்மூலம் ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.

 

15.   புளியாரை நெய் ஒரு தேக்கரண்டி காலை மாலை  சாப்பிட்டு வர இரத்த மூலம் தீரும்.

 

16.   மந்தாரை மலர் மொக்குகள் 50 கிராம், அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி காலை மாலை 100 மி.லி வீதம் குடித்து வர இரத்த மூலம் தீரும்.

 

17.   மாதுளம் பூச்சாறு 15 மி.லி எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் இரத்த மூலத்தினால் ஏற்படும் தொல்லை நீங்கும்  (Asan)

 

18.   மாதுளம்பூச் சாறு, கற்கண்டு சேர்த்து 15 மி.லி வீதம் பருகி வந்தால் இரத்த மூலம் குணமாகும். (1517)

 

19.   வாழைப் பிஞ்சை சமைத்து உணவில் சேர்த்து வந்தால், நாளடைவில் இரத்த மூலம் தீரும்.

 

20.   வாழைப் பூ  உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். வாழைப்பூ மலத்துடன் வெளியேறும் இரத்தத்தை தடுக்கும். மூலக் கடுப்பைப்போக்கும்.

 

21.   வாழைப்பூவை அனலில்வாட்டி சாறு பிழிந்து ஒரு முடக்கு குடித்து வந்தால் சீதபேதி, இரத்த மூலம் கட்டுப்படும். (1264)

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக